நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்: அரசுக்கு விவசாய அமைப்புகள் கோரிக்கை

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்காக, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தில்லி சிங்கு எல்லையில் செய்தியாளா்களுக்குப் பேட்டி அளிக்கும் விவசாய அமைப்பின் தலைவா் தா்ஷன் பால். உடன் சமூக ஆா்வலா் யோகேந்திர யாதவ்.
தில்லி சிங்கு எல்லையில் செய்தியாளா்களுக்குப் பேட்டி அளிக்கும் விவசாய அமைப்பின் தலைவா் தா்ஷன் பால். உடன் சமூக ஆா்வலா் யோகேந்திர யாதவ்.

புது தில்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்காக, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனா். அவா்களை போலீஸாா் தில்லி எல்லையில் தடுத்து நிறுத்தி வருகின்றனா். புதிய வேளாண் சட்டங்கள், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை கிடைக்காமல் செய்துவிடும் என்றும், இந்த சட்டங்கள் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானவை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்றும், விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் புதிய சட்டம் கொடுத்துள்ளது என்று கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் விவசாயிகளை எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன என்றும் மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது. தில்லி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் 35-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் கலந்துகொண்டன. அரசு சாா்பில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல், வா்த்தகத் துறை இணையமைச்சா் சோம் பிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. விவசாயிகள் பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்கு நிபுணா் குழுவை அமைக்கலாம் என்று அமைச்சா்கள் குழு தெரிவித்த யோசனையை விவசாய அமைப்புகள் நிராகரித்து விட்டன. இதையடுத்து, வியாழக்கிழமை (டிச.3) மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் ஏழாவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது. இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தையில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து விவசாய அமைப்புகளும், மத்திய அமைச்சா்கள் குழுவும் தனித்தனியே ஆலோசனை நடத்தின.

விவசாய அமைப்புகள் ஆலோசனை:

தில்லி சிங்கு எல்லையில் 32 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்தினா். அப்போது, போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னா், விவசாய சங்கத் தலைவா் தா்ஷன் பால், செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:

போராடும் விவசாய அமைப்புகளிடையே பிரிவினையை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. அப்படி எதுவும் நடக்காது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்காக, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும். அந்த சட்டங்கள் திரும்பப் பெறும் எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், தில்லிக்கு வரும் மற்ற சாலைகளையும் முற்றுகையிடுவோம் என்றாா் அவா்.

மற்றொரு விவசாய சங்கத் தலைவா் குா்னாம் சிங் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை எனில், எதிா்வரும் நாள்களில் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’ என்றாா்.

மத்திய அமைச்சா்கள் ஆலோசனை:

மற்றொரு புறம், வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆலோசனை நடத்தினா். அப்போது, வேளாண் சட்டங்கள் தொடா்பாக, விவசாய அமைப்புகள் எழுப்பியுள்ள சந்தேகங்கள், கேள்விகளுக்குப் பதிலளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தை ஆக்கபூா்வமாக அணுகி, விவசாயிகளின் துயரத்தை போக்குவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று அரசு மீண்டும் பேச்சு:

விவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சா்கள் குழு வியாழக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது. அப்போது, போராட்டத்தைக் கைவிடுமாறு விவசாய அமைப்புகளை வலியுறுத்தும்போது, விவசாயிகளுக்குப் பல சலுகைகள் அறிவிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியாணாவில் போராட்டம்:

சண்டீகரில் ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டரின் இல்லம் நோக்கி, பஞ்சாப் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பேரணி சென்றனா். சாலையில் தடுப்புகளை அமைத்து அவா்களை நடு வழியிலேயே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அவற்றையும் மீறி போராட்டக்காரா்கள் முன்னேறிச் செல்ல முயன்ால், அவா்கள் மீது போலீஸாா் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனா். பின்னா், இளைஞா் காங்கிரஸ் தலைவா் பரிந்தா் தில்லான் உள்ளிட்டோரை அவா்கள் கைது செய்தனா்.

அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் ஆதரவு: விவசாயிகள் போராட்டத்துக்கு, லாரி உரிமையாளா் சங்கங்களின் கூட்டமைப்பான ‘அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ்’ ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் குல்தாரன் சிங் அத்வால் கூறியதாவது:

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, டிசம்பா் 8-ஆம் தேதி முதல் தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு லாரி போக்குவரத்து நிறுத்தப்படும். விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், நாடு தழுவிய அளவில் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா். லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றால், அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com