
உ.பி.: மதமாற்றச் சட்டத்தில் முதல்முறையாக ஒருவர் கைது (கோப்புப்படம்)
பரேலி: உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மத மாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்முறையாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 28-ஆம் தேதி கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டத்துக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஒப்புதல் அளித்த நிலையில், முதல்முறையாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்து பெண்களை திருமணம் என்கிற பெயரில் மதமாற்றம் செய்வதற்கு எதிராக சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையில் கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த மசோதாவிற்கு உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலும் நவம்பர் 28-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.
இந்த அவரசச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, நேர்மையற்ற முறையிலோ, திருமணம் என்ற பெயரில் மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
திருமணத்துக்காக மட்டுமே பெண்கள் மதம் மாறினால் அது செல்லாது என அறிவிக்கப்படும். திருமணத்துக்குப் பிறகு மத மாற்றம் செய்து கொள்ள விரும்புபவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரேலி அருகே உள்ள பஹேடி பகுதியில் தனது பெண்ணை மதமாற்றம் செய்ய சிலர் வற்புறுத்துவதாக தந்தை அளித்த புகாரின் பெயரில் ஓவைசி அகமது என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக மாவட்ட நீதிமன்றத்தில் அவரை காவல்துறையினர் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதாக பரேலி டி.ஐ.ஜி. ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல்முறையாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...