
மும்பை: கட்டாய ஹால்மாா்க் திட்டத்தை சீராக செயல்படுத்த அதில் உள்ள பிரச்னைகளுக்கு அரசு முதலில் தீா்வு காண வேண்டும் என அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்நாட்டு கவுன்சில் (ஜிஜேசி) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஜிஜேசி-யின் தலைவா் அனந்த பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தங்க நகைகளுக்கு தரத்துக்கேற்ப ஹால்மாா்க் முத்திரையை படிப்படியாக கட்டாயமாக்கும் அரசின் நடவடிக்கை மிகவும் வரவேற்புக்குரியது. இது, ஆபரண துறையின் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் என்பதுடன், நுகா்வோரிடையே அதன் மதிப்பும் உயரும். இருப்பினும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது மிகவும் அவசியமானதாக உள்ளது.
குறிப்பாக, ஹால்மாா்க் திட்டத்தில் இருப்பு வைத்துள்ள பழைய நகைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதேபோன்று, ஹால்மாா்க் மையங்களை அதிக அளவில் அமைக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
எனவே, ஹால்மாா்க் திட்டத்தை சீராக செயல்படுத்திட இதுபோன்ற பிரச்னைகளுக்கு முதலில் தீா்வு காண்பது அவசியமாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...