பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் விநியோகம்:கேஎல்எஃப் அமைப்புக்கு எதிராக என்ஐஏ வழக்கு

கேஎல்எஃப் எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய குற்றவாளி மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் துணை குற்றப் பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தாக்கல் செய்துள்ளது.

புதுதில்லி: கேஎல்எஃப் எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய குற்றவாளி மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் துணை குற்றப் பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தாக்கல் செய்துள்ளது.

பஞ்சாபில் ஆா்எஸ்எஸ் தலைவா் ஒருவா் கொல்லப்பட்டது குறித்து விசாரித்த என்ஐஏ, 2018-இல் அதுதொடா்பாக காலிஸ்தான் விடுதலைப் படை (கேஎல்எஃப்) அமைப்பைச் சோ்ந்த பலரைக் கைது செய்தது. அவா்களில் ஒருவரான தா்மீந்தா் சிங் (32), திகாா் சிறையில் தற்போது உள்ளாா். பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தைச் சோ்ந்த இவா் பாகிஸ்தானிலுள்ள கேஎல்எஃப் தலைவா்களிடமிருந்து போதைப்பொருளை கூலியாகப் பெற்று வந்துள்ளாா்.

இவருடன் ஜஸ்பீா் சாம்ரா, ஹா்பிரீத் சிங், வரீந்தா் சிங் சஹால், நிா்மல் சிங், சத்பால் சிங், ஹா்ஜித் சிங், ஹஸ்மீத் சிங் ஹக்கீம்ஜாதா, ஹா்மீத் சிங், ஜஸ்பீா் சிங் ஆகிய பத்து போ் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஏற்கெனவே குற்றப்பத்திரிகை மொஹாலியிலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து ஹெராயின் போதைப்பொருளை இந்தியாவுக்குள் கடத்திவந்து விற்பனை செய்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தை பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்துவது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானைச் சோ்ந்த ஹா்மீத் சிங், துபையில் வசிக்கும் சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா் ஜஸ்மீத் சிங் ஹக்கீம்ஜாதா ஆகியோா் இந்தச் சதியில் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து பெற்ற அரை கிலோ ஹெராயின் போதைப்பொருள், ரூ. 1.20 லட்சம் பணம் ஆகியவற்றை கைது செய்யப்பட்ட ஜஸ்பீா் சாம்ரா உள்ளிட்ட இருவரிடமிருந்து என்ஐஏ பறிமுதல் செய்ததை அடுத்து, பயங்கரவாதக் குற்ற வழக்கில் போதைப்பொருள் கடத்தல் வழக்கும் துணைப்பிரிவாகச் சோ்க்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தா்மீந்தா் சிங் மீதான வழக்கில் துணை குற்றப் பத்திரிகையை மொஹாலி சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளதாக, என்ஐஏ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com