கோப்புப் படம்
கோப்புப் படம்

வேளாண் சட்ட விவகாரம்: சரத் பவாரின் நிலைப்பாட்டில் மாற்றமா? என்சிபி விளக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது, வேளாண் துறையில் தனியாரை அனுமதிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பாக அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.


மும்பை/நாகபுரி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது, வேளாண் துறையில் தனியாரை அனுமதிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பாக அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால் விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பரவும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை (டிச. 9) சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சரத் பவார் வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது, வேளாண் துறையில் தனியார் முக்கியப் பங்கு வகிக்க அனுமதிக்கும் வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டி (ஏபிஎம்சி) சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டுமென 2010}இல் அப்போதைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்; அவர் வலியுறுத்திய சீர்திருத்தத்தைதான் இப்போது மத்திய பாஜக அரசு செய்துள்ளது. அப்போது ஆதரித்தவர் அரசியல் காரணங்களுக்காக இப்போது எதிர்க்கிறார் என அரசுத் தரப்பில் தகவல்கள் வெளியாகின.

இந்தக் குற்றச்சாட்டுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபஸேதிங்கள்கிழமை தெரிவித்திருப்பது:

ஏபிஎம்சி சட்டம் (2003) வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் அந்தச் சட்டத்தை அமல்படுத்த பல மாநில அரசுகள் தயக்கம்காட்டின. சரத் பவார் மத்திய வேளாண் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக ஆலோசனைகளைத் தெரிவிப்பதற்காக விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து, மாநில வேளாண் சந்தை வாரியங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயன்றார். அந்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பல்வேறு மாநில அரசுகளுக்கு அவர் விளக்கினார். இதைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் அச்சட்டத்தை அமல்படுத்த முன்வந்தன. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக பவாரால் அச்சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.

ஆனால், இப்போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட விஷயங்களில் விவசாயிகளின் மனதில் சந்தேகங்களையும், பாதுகாப்பின்மையையும் உருவாக்கியுள்ளது. மேலும் பல விஷயங்களுக்கு பாஜக அரசு தீர்வுகாணத் தவறியதால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சட்டங்கள் தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. மேலும், விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் நியாயமான அச்சத்தைப் போக்கவும் தவறிவிட்டது என்றார்.

பிரஃபுல் படேல்:  என்சிபியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரஃபுல் படேல் நாகபுரியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. ஏபிஎம்சி அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக தெளிவான விளக்கம் இல்லை. தங்களுக்கு  இழப்பு ஏற்பட்டாலோ, ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களால் மதிக்கப்படாவிட்டாலோ விவசாயிகள் என்ன செய்வார்கள் என்றார்.

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது என்சிபி உறுப்பினர்கள் அவையில் இல்லாதது ஏன் எனக் கேட்டபோது, புதிய வேளாண் மசோதாக்கள் அவசர கோலத்தில் கொண்டுவரப்படுவதாக அப்போது தெரிவித்தோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com