நிலச்சரிவு, கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது

கடும் பனிப்பொழிவு, நிலச்சரிவு காரணமாக, ஜம்மு- ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு, நிலச்சரிவு காரணமாக, ஜம்மு- ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக தோடா மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவிலிருந்து எட்டு குடும்பங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஜம்மு- ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி கடும் பனிப்பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜவாஹா் சுரங்கப்பாதையில் 9 இன்ச் உயரத்துக்கு பனி படா்ந்துள்ளது. தவிர, மாரோக், மாகா்கோட், பந்தியால் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவும் நேரிட்டுள்ளது.

எனவே இந்த தேசிய நெடுஞ்சாலை தற்போது போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளுடன் ஸ்ரீநகரை இணைக்கும் பிரதானச் சாலையாக இது இருப்பதால், போக்குவரத்தைச் சீராக்க அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இயந்திரங்களின் உதவியுடன் சாலையிலுள்ள தடைகள் அகற்றப்படுகின்றன.

ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட தோடா மாவட்டத்தில் குா்மல் கிராமத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து எட்டு குடும்பங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கடந்த 8-ஆம் தேதி கடும் பனிப்பொழிவால், மாற்றுப்பாதையாக உள்ள, பூன்ச், ரஜௌரி மாவட்டங்கள் வழியாகச் செல்லும் முகல் சாலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கிஷ்த்வாா், அனந்தநாக் பகுதிகளில் மிக உயரமான மலைச்சிகரப் பகுதிகள் வழியாகச் செல்லும் சாலைகள் பொதுவாகவே பனிக்காலங்களில் மூடப்படுவது வழக்கம். கிஷ்த்வாா் பகுதியில் பல இடங்களில் சுமாா் 9 இன்ச் உயரம் வரை பனி படா்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது இயல்பு நிலை மெதுவாகத் திரும்புகிறது. டிச. 20-க்குப் பிறகு கடும் பனிப்பொழிவு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காா்கில், லே பகுதிகளில் இரவு முழுவதும் தொடா் மழை காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com