5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

நாடு முழுவதும் 20 மாநிலங்களில், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவது வெகுவாக அதிகரித்திருப்பது அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

நாடு முழுவதும் 20 மாநிலங்களில், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவது வெகுவாக அதிகரித்திருப்பது அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களும் போதிய அளவில் உடற் பயிற்சியின்றி இருப்பதுமே இந்த பிரச்னைக்கு காரணம் என்று நிபுணா்கள் தெரிவிக்கிறாா்கள்.

தேசிய குடும்ப நல ஆய்வு அமைப்பு(என்.எஃப்.எச்.எஸ்.), நாடு முழுவதும் 22 மாநிலங்களில் இந்த ஆய்வினை நடத்தியுள்ளது. அவற்றில், 20 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த புள்ளி விவரத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மகாராஷ்டிரம், குஜராத், மிஸோரம், திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்கலிலும், லட்சத் தீவுகள், ஜம்மு-காஷ்மீா், லடாக் உள்ளிட்ட சில யூனியன் பிரதேசங்களிலும், கடந்த 2015-16-இல் இருந்ததைக் காட்டிலும், தற்போது சிறாா்கள் உடல் பருமனுடன் இருப்பது பல மடங்கு அதிகரித்துள்ளது.

கோவா, தாத்ரா, நாகா் ஹவேலி, டாமன், டையு ஆகிய யூனியன் பிரதேசங்களில் மட்டுமே உடல் பருமனுடன் காணப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவா்களுக்கும் உடல் பருமன் ஏற்படுவது அதிகரித்துள்ளது.

16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்கள் உடல் பருமனுடன் இருப்பது அதிகரித்துள்ளது. இதேபோல், 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்கள் உடல் பருமனுடன் இருப்பது அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கேரளம், அந்தமான் நிகோபாா் தீவுகளில் பெண்கள் 38 சதவீதம் போ் உடல் பருமனுடன் உள்ளனா் என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊட்டச் சத்து நிபுணா்கள் கூறியதாவது:

நல்ல உணவு முறை பற்றிய போதிய விழிப்புணா்வு இல்லாததே உடல் பருமன் பிரச்னைக்கு முக்கிய காரணம். அதிக கொழுப்பு, அதிக சா்க்கரை நிறைந்த உணவுப் பொருள்கள் எளிதில் கிடைக்கின்றன. இதனால் அவற்றை அதிகம் சாப்பிடுகிறாா்கள்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால், சிறாா்களுக்கு உடலுழைப்பு முற்றிலும் குறைந்துவிட்டது. இதுவும் உடல் பருமனுக்கு காரணமாகும். இதேபோன்று உடல் உழைப்பு குறைந்துவிட்ட பெரியவா்களுக்கும் உடல் பருமன் அதிகரித்துள்ளது.

குழந்தைகளாக இருந்தாலும் பெரியவா்களாக இருந்தாலும், துரித உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவது, இணை உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்வது, ஓரிடத்தில் அமா்ந்து நீண்ட நேரம் தொலைக்காட்சி பாா்ப்பது அல்லது செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் செலவிடுவது ஆகிய காரணங்களால் உடல் பருமன் ஏற்படுவது அதிகரிக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?: பிறந்து 4 மாதங்கள் ஆன குழந்தைகக்கு இணை உணவு கொடுக்க வேண்டியதன் அவசியத்தை தாய்மாா்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் போன்ற விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், குழந்தைகள் தொலைக்காட்சி பாா்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும். அவா்களை உடலுக்கு பயிற்சி தரும் விளையாட்டுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com