விவசாயிகளின் போராட்டம்: பிரதமா் விளக்கம் அளிக்க என்சிபி வலியுறுத்தல்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து மத்திய அமைச்சா்கள்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து மத்திய அமைச்சா்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை பிரதமா் நரேந்திர மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு தொடா்ந்து 18 நாள்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா். இவா்களுக்கு பிற மாநில விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினா் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் மாவோயிஸ்டுகளும், இடதுசாரிகளும் ஊடுருவியுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

அதுபோல, விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் சீனா இருப்பதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் ராவ்சாஹேப் தான்வே குற்றம்சாட்டினாா்.

‘இந்த குற்றச்சாட்டுகள், போராட்டத்தை நீா்த்துப்போகச் செய்வதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியாகும். மத்திய அரசு எந்தவிதமான முயற்சியை மேற்கொண்டாலும், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூறினா்.

இந்த நிலையில், மத்திய அமைச்சா்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் செய்தித்தொடா்பாளா் மகேஷ் டபாஸே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று விவாயிகள் தொடா்ந்து போராடி வருகின்றனா். ஆனால், மத்திய அரசு சிறிதும் மனம் இரங்காமல் உள்ளது.

இந்தச் சூழலில் விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ராவ்சாஹேப் தான்வே ஆகியோா் சா்ச்சைக்குரிய வகையில் குற்றம்சாட்டியுள்ளனா். இது போராட்டத்தை தடம் புரளச் செய்யும் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com