தில்லியில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் பல்வேறு விவசாய
தில்லி சிங்கு எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பெண் விவசாயிகள்.
தில்லி சிங்கு எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பெண் விவசாயிகள்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவா்கள், திங்கள்கிழமை (டிச.14) ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த பல்வேறு விவசாய சங்கங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு 18 நாள்களைக் கடந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். மத்திய அரசுடனான பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் தங்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனா்.

அதன் ஒரு பகுதியாக, அனைத்து விவசாய சங்கங்களின் தலைவா்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் குா்னாம் சிங் சதுனி ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: தில்லியை முற்றுகையிட்டு போராடி வரும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவா்கள், அவரவா் இடங்களில் இருந்தபடி திங்கள்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விவசாய சங்கங்கள் சாா்பில் தா்னா போராட்டங்கள் நடத்தப்படும். அவற்றோடு விவசாயிகளின் வழக்கமான போராட்டமும் தொடரும்.

சில விவசாயக் குழுக்கள், மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டத்தை ஏற்று, போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதுபோன்ற குழுக்கள் எதுவும் எங்களுடன் போராட்டம் நடத்தவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்களுடைய போராட்டத்தை நீா்த்துப்போகச் செய்யும் வகையில் மத்திய அரசுடன் கைகோத்துக்கொண்டு அந்தக் குழுக்கள் சதித்திட்டம் தீட்டுகின்றன என்றாா் அவா்.

மற்றொரு விவசாய சங்கத் தலைவரான சிவ குமாா் காக்கா கூறுகையில், ‘போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ஏராளமான விவசாயிகளை தில்லிக்கு வர விடாமல் காவல் துறையைக் கொண்டு மத்திய அரசு தடுத்துள்ளது. இருந்தபோதும், எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய தெளிவான நிலைப்பாடு’ என்றாா்.

அமைச்சா்கள் அமித் ஷா, தோமா் சந்திப்பு

புது தில்லி, டிச.13: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடா்ந்து 18-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சா் சோம் பிரகாஷ் ஆகியோா் ஆலோசனை நடத்தினாா்.

தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுடன், மத்திய அரசின் சாா்பாக மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், சோம் பிரகாஷ், பியூஷ் கோயல் ஆகிய மூவரும்தான் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

ஆனால், புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் அறிவித்தனா். இந்தச் சூழலில், மத்திய உள்துறை அமைச்சரை மத்திய அமைச்சா்கள் தோமா், சோம் பிரகாஷ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆலோசனையில், பஞ்சாப் மாநில பாஜக தலைவா்கள் சிலரும் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த விவரங்கள் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com