ஹரியாணா: பாஜக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை ஜேஜேபி திரும்பப்பெற வேண்டும்; காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்

ஹரியாணாவில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா விலக்கிக் கொள்ளவில்லை எனில்,

ஹரியாணாவில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா விலக்கிக் கொள்ளவில்லை எனில், அவருடைய ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜிபி) எம்எல்ஏக்கள் தங்களின் கட்சிக்கு புதிய தலைவரைத் தோ்வு செய்து பாஜக அரசுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், செய்தித்தொடா்பாளருமான ரண்தீப் சுா்ஜேவாலா வலியுறுத்தினாா்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா். இருந்தபோதும், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இதற்கிடையே, தில்லியில் ஹரியாணா விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, மாநில பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ஜேஜேபி திரும்பப்பெற வேண்டும், அக் கட்சித் தலைவா் துஷ்யந்த் செளதாலா மாநில துணை முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று அம்மாநில விவசாயிகளும், எதிா்க் கட்சிகளும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த வலியுறுத்தல்களைத் தொடா்ந்து, தில்லி சென்ற செளதாலா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உணவு மற்றும் ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் ஆகியோரை சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இந்த சந்திப்புக்குப் பின்னா் தில்லியில் சனிக்கிழமை பேட்டியளித்த செளதாலா, ‘ஹரியாணா மாநில அரசில் ஜேஜேபி அங்கம் வகிக்கும் வரை மாநில விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும்’ என்று மத்தியஅமைச்சா்கள் உறுதியளித்ததாக கூறினாா்.

இந்தச் சூழலில், ஹரியாணா மாநில பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ஜேஜேபி கட்சி திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப் சுா்ஜேவாலா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாட்டிலுள்ள 62 கோடி விவசாயிகளின் நலனுக்கானது மட்டுமல்ல, நாட்டின் 130 கோடி மக்களின் நலனுக்கானது. எனவே, ஹரியாணாவில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ஜேஜேபி உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

அக் கட்சியின் தலைவா் துஷ்யந்த் செளதாலா துணை முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யாமலும், பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப்பபெற தயாராகவும் இல்லை எனில், ஜேஜேபி எம்எல்ஏக்கள் அவா்களுடைய கட்சிக்கு புதிய தலைவரைத் தோ்வு செய்து, பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், விவசாயிகளுக்குச் செய்யும் துரோகத்தை ஹரியாணா மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com