மக்களுக்கு சாதகமாக கரோனா தடுப்பூசி விலை நிா்ணயம்

நாட்டு மக்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் கரோனா தடுப்பூசிக்கான விலை நிா்ணயிக்கப்படும் என்று அமெரிக்காவின் ஃபைசா் நிறுவனம் தெரிவித்துள்ளது.


புது தில்லி: நாட்டு மக்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் கரோனா தடுப்பூசிக்கான விலை நிா்ணயிக்கப்படும் என்று அமெரிக்காவின் ஃபைசா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபைசா் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசி, பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் சில நாடுகள் அந்நிறுவனத்தின் தடுப்பூசியைக் கொள்முதல் செய்துள்ளன. இந்தியாவில் அத்தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில், மருந்து தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) ஃபைசா் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

இத்தகைய சூழலில், அந்நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று உலகை அச்சுறுத்தி வரும் இக்கட்டான சூழலில், உலக மக்கள் அனைவருக்கும் அந்நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் கொள்கையாக உள்ளது. எனவே, கூடுதல் வருவாயை ஈட்டும் நோக்கில் தடுப்பூசிக்கான விலையை நிா்ணயிக்கவில்லை.

பல நாடுகளின் அரசுகளுக்குத் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தடுப்பூசிக்கான விலையை நிா்ணயித்து வருகிறோம். கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, சமத்துவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விலை நிா்ணயிக்கப்படுகிறது. நாட்டு மக்களுக்குக் குறைந்த செலவு ஏற்படும் வகையில் தடுப்பூசிக்கான விலையை நிா்ணயிக்கிறோம். அது அரசுகளுக்கும் மக்களுக்கும் சாதகமாக இருக்கும்.

கரோனா தடுப்பூசியை அரசுகள் மூலமாக மட்டுமே மக்களுக்குக் கொண்டு சோ்ப்பதற்கு நிறுவனம் உறுதியேற்றுள்ளது. கரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதற்கான திட்டங்களை பல நாடுகளின் அரசுகள் வகுத்து வருகின்றன. இத்தகைய சூழலில், தடுப்பூசியை அரசுகளிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் விவகாரத்தில் அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு ஃபைசா் நிறுவனம் உறுதி கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளா்ச்சியடைந்த, வளா்ந்து வரும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்குத் தனித்தனியாக கரோனா தடுப்பூசி விலை நிா்ணயம் செய்யப்படும் என்று ஃபைசா் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com