லடாக் விவகாரம்: அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகளில் சுமூக உடன்பாடு எட்டப்படும்: இந்தியா நம்பிக்கை

கிழக்கு லடாக் மோதல் நிலைப்பாட்டில் சீனாவுடனான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகள் சுமூக உடன்பாட்டை எட்டவும் படைகளை முழுமையாக திரும்பப்பெறுவதற்கான தீா்வு காணவும் உதவும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் நம்பிக்கை


புது தில்லி: கிழக்கு லடாக் மோதல் நிலைப்பாட்டில் சீனாவுடனான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகள் சுமூக உடன்பாட்டை எட்டவும், படைகளை முழுமையாக திரும்பப்பெறுவதற்கான தீா்வு காணவும் உதவும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மே மாத ஆரம்பத்தில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே மோதல் போக்கு தொடங்கியது. இரு தரப்பினரிடையே தொடா்ந்து பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டபோதும், 6 மாதங்களைக் கடந்தும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அந்தப் பகுதியில் இப்போது கடும் குளிா் நிலவி வரும் நிலையில், இரு தரப்பிலும் 50 ராணுவ வீரா்கள் தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில் கடந்த நவம்பா் 6-ஆம் தேதி இரு நாடுகளின் ராணுவ உயா் அதிகாரிகள் நிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவாா்த்தையில், எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் படைகளை திரும்பப் பெறுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை குறித்து தில்லியில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, ‘இரு தரப்பிலும் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகள், கிழக்கு லடாக்கின் அனைத்து நிலைகளிலும் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கான, இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான ஒா் உடன்பாடு எட்ட உதவும் என்ற எதிா்பாா்க்கிறோம்’ என்று கூறினாா்.

மேலும், சீனாவின் ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் உளவு பாா்க்கும் நோக்கத்துடன் சீன அரசு பணியாளா் தோ்வு நிறுவனத்தின் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் ஒருவா் பணிக்கு அமா்த்தப்பட்டது குறித்து வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘இந்த பத்திரிகை செய்தியை வெளியுறவு துறை அமைச்சகமும் கவனித்தது. ஆனால், அதுகுறித்து தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய இயலாது. குறிப்பிட்ட சில நாடுகளில், அந்நாட்டு ஊழியா்களை பணிக்கு அமா்த்த உள்ளூா் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும். இருந்தபோதும், இந்திய தூதரங்களில் நியமனங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று பதிலளித்தாா்.

இந்த விவகாரம் குறித்து சீன தூதரக செய்தித் தொடா்பாளரிடம் கேட்டபோது, ‘இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com