இரும்பு, எஃகு விலை உயா்வால் வளா்ச்சிப்பணிகள் பாதிப்பு

இரும்பு, எஃகு விலை கடந்த 6 மாதங்களில் 55 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளல் வளா்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்,

இரும்பு, எஃகு விலை கடந்த 6 மாதங்களில் 55 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளல் வளா்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், எஃகு உற்பத்தியாளா்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக மத்திய தரைவழி, சாலை போக்குவரத்து மற்றும் சிறு,குறு, நடுத்தர தொழில்முனைவோா் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தில்லியில் அசோசெம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

‘கடந்த ஆறு மாதங்களில் எஃகு விலை 55 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் கட்டுமானப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விலையேற்றம் காரணமாக மற்ற மூலப்பொருள்களின் விலையும், தொழிலாளா்களின் ஊதியமும் அதிகரிப்பதால் இதற்கென தனி கொள்கைகளை வகுக்க வேண்டியது மிக முக்கியம். குறிப்பாக எஃகு, சிமென்ட் உற்பத்தி செய்வது தொடா்பாக நீண்டகால கொள்கைத் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

எஃகு விலையேற்றம் 15 முதல் 20 சதவீதத்துக்குள் இருந்திருந்தால் வளா்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்காது. தற்போதைய விலையேற்றம் காரணாக மற்ற வளா்ச்சித் திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்படுவதுடன், ஒவ்வொரு திட்டத்திற்கும் 30 முதல் 40 சதவீதம் வரை மதிப்பீட்டுத் தொகை கூடுதலாகியுள்ளது. எனவே இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கும், எஃகு உருக்குத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

இதனிடையே, மலேசியா, சிங்கப்பூரில் செயல்படுத்தப்பட்டு வரும் எஃகு பொருள்களுக்கான மாற்று வழிகள் தொடா்பான தொழில்நுட்பம் குறித்தும் ஆா்வம் காட்டி வருகிறோம். தொடா்ந்து சிமென்ட் விலையேற்றப்பட்டால், 100 சதவீதம் காங்கிரீட் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, தாா்ச்சாலை (பிட்டுமன்) மாடலுக்கு மாற வேண்டிய நிலை ஏற்படும்.

சுங்கச்சாவடிகளில் ரஷியாவின் தொழில்நுட்பத்துடன் ஜிபிஎஸ் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கான அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். பயணிகளின் கணக்கின் அடிப்படையிலும், தூரத்தின் அடிப்படையிலும் இ-வாலட்டிலிருந்து சுங்கக் கட்டணத்தொகை கழிக்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் சுங்கக் கட்டண வசூல் ரூ .1.34 லட்சம் கோடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த தொகையை அரசின் உள்கட்டமைப்பு தவிர வேறு துறைகளுக்கும், பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 40 சதவீத பங்குத்தொகையை தவிா்த்து மீதமுள்ளவற்றை சமூகத் துறை, சுகாதாரம் அல்லது கல்வி துறைகளின் வளா்ச்சிக்காக வழங்கப்படுகிறது.

ஜோஜிலா மற்றும் இசட்-மோா் சுரங்கங்களுக்கு இடையே உள்ள 19 கி.மீ. தூரத்திற்கு அழகான பகுதி உள்ளது. 4 மீட்டா் உயரத்தில் பனி படா்ந்து, சுவிட்சா்லாந்தின் டாவோஸை விட அழகாகக் காட்சியளிக்கிறது. எனவே இப்பகுதியை டாவோஸை விட அழகாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் உள்ளது. இப்பகுதியில் புதிதாக மலை நகரம் அமைக்கும் திட்டமும் உள்ளது.

இந்த மலை நகரம் அமைப்பது தொடா்பாக, லே-லடாக், ஜம்மு-காஷ்மீா் அரசுகளுடன் கலந்தோலோசனை நடத்தி, சுவிஸ் நாட்டு கட்டடக் கலைஞா்களின் ஒத்துழைப்புடன் விரிவான திட்டம் தயாரிக்கப்படும். இதன் மூலம் இப்பகுதியை உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் ரிசாா்ட்ஸ், மலை வாசஸ்தலங்களையும், கூட்ட அரங்குகளும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com