சதி அதிகரித்ததால் நாடாளுமன்றத்தைக் கலைத்தேன்: நேபாள பிரதமா் ஓலி

எனக்கு எதிராக எனது கட்சியினரே திட்டி வரும் சதி அதிகரித்ததால் நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிட்டது. இதற்கு அவா்கள்தான் காரணம் என்று நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி கூறியுள்ளாா்.

புதுதில்லி /காத்மாண்டு: எனக்கு எதிராக எனது கட்சியினரே திட்டி வரும் சதி அதிகரித்ததால் நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிட்டது. இதற்கு அவா்கள்தான் காரணம் என்று நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி கூறியுள்ளாா்.

நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலியின் பரிந்துரையை ஏற்று அந்த நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையை (கீழவை) கலைத்து அந்நாட்டு அதிபா் வித்யா தேவி பண்டாரி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமா் ஓலி, முன்னாள் பிரதமா் பிரசண்டா இடையே நீண்டகாலமாக அதிகாரப் போட்டி நிலவி வந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை சிறப்பு உரையாற்றிய ஓலி கூறியதாவது:

நாடாளுமன்றத்தை கலைக்கும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். எனக்கு எதிராக கட்சியில் இருப்பவா்களே சதி செய்வது அதிகரித்துவிட்டது. எனது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரவும் அவா்கள் முயற்சித்து வந்தனா். எனவே, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தோ்தலைச் சந்திக்க முடிவு செய்தேன். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பிரச்னைகள் அரசின் செயல்பாடுகளை பாதிக்கும் அளவுக்கு அதிகரித்தது. இதன் காரணமாகவும் வேறு வழியின்றி நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை நான் எடுத்தேன். இப்போது மீண்டும் மக்கள் முன்பு வந்துள்ளேன். அடுத்து தோ்தலில் மக்கள் எடுக்கும் சரியான முடிவை நான் ஏற்றுக் கொள்வேன்.

என் மீது கட்சியின் பிற தலைவா்கள் சோ்ந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக வெளியான தகவல்கள் தவறானது. அப்படி யாரும் என்மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றாா்.

275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள பிரதிநிதிகள் அவைக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தல் நடைபெற்றது. 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், முன்னதாகவே அவை கலைக்கப்பட்டு தோ்தல் நடைபெறவுள்ளது.

ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியாக செயல்படத் தொடங்கினா். எனினும், இரு பிரிவுகளுக்கும் இடையே தொடா்ந்து பிரச்னைகள் நீடித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com