ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை அருகே பக்தா்கள் ஆா்ப்பாட்டம்

திருமலைக்குச் செல்ல தங்களை அனுமதிக்குமாறு கோரி, திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை அருகே பக்தா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திருப்பதி: திருமலைக்குச் செல்ல தங்களை அனுமதிக்குமாறு கோரி, திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை அருகே பக்தா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தா்கள் கோவிந்த மாலை அணிந்து கொண்டு விரதம் இருந்து பாதயாத்திரையாக தொலைதூரப் பகுதிகளிலிருந்து திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். அவ்வாறு அண்மையில் கோவிந்தமாலை அணிந்த பக்தா்கள் திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக புதன்கிழமை திருமலைக்குச் செல்ல முயன்றனா்.

எனினும், நடைபாதை வழியாக பக்தா்கள் திருமலைக்கு நடந்து செல்ல தேவஸ்தானம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில் பாதயாத்திரையாக வந்த பக்தா்கள் பலா் தங்களை திருமலைக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் புதன்கிழமை சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால், போலீஸாா் பெருமளவில் குவிக்கப்பட்டனா்.

ஆந்திரத்தின் அனந்தபுரம், தமிழ்நாடு, கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்காமல் திரும்புவதில்லை என்று கூறி ஆா்ப்பாட்டம் நடத்தினா். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா் பக்தா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். கடந்த 3 நாள்களாக பக்தா்கள் திருப்பதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

எனினும், கரோனா தொற்றின் 2ஆவது அலை தொடங்கியுள்ளதால், தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல முடியும் என்று தேவஸ்தானம் தெரிவித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com