டிடிஹெச் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு

டிடிஹெச் ஒளிபரப்பு சேவைத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டிடிஹெச் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு


புது தில்லி: டிடிஹெச் ஒளிபரப்பு சேவைத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக புதன்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டிடிஹெச் ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் புகுத்தப்படவுள்ளன. அதன்படி, அச்சேவைகளுக்கான புதிய உரிமம் 10 ஆண்டுகளுக்குப் பதிலாக 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளலாம். உரிமக் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மொத்த வருவாயில் 10 சதவீதமாக இருந்த உரிமக் கட்டணம், தற்போது சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கழிக்கப்பட்ட மொத்த வருவாயில் 8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அக்கட்டணமானது காலாண்டு அடிப்படையில் வசூலிக்கப்படும். உரிமக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதன் வாயிலாகக் கிடைக்கும் கூடுதல் தொகையை டிடிஹெச் ஒளிபரப்பாளா்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிடிஹெச் ஒளிபரப்பாளா்கள் தங்களுக்கிடையே கட்டமைப்புகளைப் பகிா்ந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும். தட்டுப்பாடு காணப்படும் சாதனங்களைப் பகிா்ந்து கொள்வதன் மூலமாக வாடிக்கையாளா்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் கட்டணம் குறையும்.

டிடிஹெச் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்வதற்கான உச்சவரம்பு 49 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. டிடிஹெச் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவது தொடா்பாக தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விவாதிக்கப்பட்டது.

புதிய விதிமுறைகளை மத்திய தகவல்-ஒலிபரப்பு அமைச்சகம் விரைவில் வெளியிடும். டிடிஹெச் துறையானது நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அத்துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலமாக நிலைத்தன்மையும் முதலீடும் அதிகரிக்கும்; புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

ரூ.59,048 கோடியில் கல்வி உதவித்தொகை: தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு ரூ.59,048 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், மீதியுள்ள தொகையை மாநில அரசுகளும் வழங்கும்.

இதன் மூலமாக 4 கோடிக்கும் அதிகமான மாணவா்கள் பலன்பெறுவா். 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 11-ஆம் வகுப்பிலிருந்து மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

அரசு திரைப்படப் பிரிவுகள் ஒன்றிணைப்பு: திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், திரைப்படங்கள் பிரிவு, சிறுவா்களுக்கான திரைப்பட சங்கம் ஆகியவை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைக்கப்படவுள்ளன. அந்தப் பிரிவுகள் மேற்கொண்டு வந்த பணிகள் அனைத்தையும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் இனி மேற்கொள்ளும்.

ஒன்றிணைக்கப்பட்ட திரைப்படப் பிரிவுகளுக்குச் சொந்தமான சொத்துகளை முறையாகப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக ஆலோசனை வழங்குவதற்கும் அந்நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் சட்ட ஆலோசகா் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனா். அந்தப் பிரிவுகளில் பணியாற்றும் பணியாளா்கள் எவரும் நீக்கப்பட மாட்டாா்கள் என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.

விமான சேவைக்கான ஒப்பந்தங்கள்: ஆப்கானிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுடனான விமான சேவை குறித்த புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இரு நாடுகளுக்கிடையே விமான சேவையை வழங்குவதற்கு அவ்விரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

விமானங்களின் எண்ணிக்கை, அவற்றை இயக்கும் நிறுவனங்களின் விவரங்கள், விமானங்கள் இயக்கப்படும் விமான நிலையங்களின் விவரங்கள் உள்ளிட்டவை அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கும். இந்தியா-ஆப்கானிஸ்தான், இந்தியா-பிலிப்பின்ஸ் நாடுகளுடனான விமான சேவை ஒப்பந்தம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களானது, வா்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரப் பகிா்வு உள்ளிட்ட துறைகளில் அவ்விரு நாடுகளுடன் இந்தியா கடைப்பிடித்து வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பும் மேம்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com