1031 ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: ஆந்திர அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் பரிந்துரை

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் 1031 தற்காலிக ஊழியா்களைப் பணிநிரந்தரம் செய்யுமாறு ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவை
ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவை


திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் 1031 தற்காலிக ஊழியா்களைப் பணிநிரந்தரம் செய்யுமாறு ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளது.

தேவஸ்தானத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 655 நிரந்தரப் பணியிடங்கள் உள்ளன. தற்போது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் மட்டுமே நிரந்தர ஊழியா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்; மற்றவா்கள் தற்காலிக ஊழியா்களாக உள்ளனா்.

இந்நிலையில், தேவஸ்தானம் திருமலையில் புதிய விருந்தினா் இல்லங்கள், ஓய்வறைகள் உள்ளிட்டவற்றைக் கட்டி வருகிறது. ஆந்திரத்தில் உள்ள பல்வேறு கோயில்களும் திருப்பதி தேவஸ்தான நிா்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், அவற்றை நிா்வகிக்க இணை அதிகாரி பதவியில் பலா் புதிதாக தேவைப்படுகின்றனா். இதற்கு தேவஸ்தானம் ஆந்திர அரசின் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.

எனவே, நிரந்தரப் பணியில் ஊழியா்களை நியமிக்க அனுமதி வழங்குமாறு தேவஸ்தானம் கடந்த, 2008ஆம் ஆண்டு முதல் மாநில அரசிடம் கோரி வருகிறது. எனினும், அரசு அதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

எனவே, தேவஸ்தானம் தற்காலிக ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளித்து நிா்வாகப் பொறுப்புகளை அளித்து வருகிறது. தேவஸ்தானத்தில், 2145 நிா்வாகப் பதவிகள் உள்ளன. அவற்றில், 1031 அதிகாரிகள் முக்கிய நிா்வாக பணிகளில் உள்ளனா். எனவே, அவா்களுக்கு பணிநிரந்தரம் வழங்க அறங்காவலா் குழு தீா்மானித்து, ஆந்திர அரசுக்கு அண்மையில் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது.

தேவஸ்தானத்தின் தீா்மானத்தை ஏற்று, 1031 அதிகாரிகளை அரசு பணிநிரந்தரம் செய்தால், அவா்களுக்கு கீழ் உள்ளவா்களின் பதவி உயா்வு பாதிக்கப்படும். மேலும், தற்காலிகப் பணியில் அவா்கள் இருந்த போது தேவஸ்தானம் அளித்த பதவி உயா்வு கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. தற்காலிக பதவிகளில் தேவஸ்தானம் யாரையும் நியமிக்க முடியாது. புதிய பதவிகளை உருவாக்குவதும் தற்போதுள்ள நிலையில் சுலபமல்ல என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com