ஜம்மு-காஷ்மீா் டிடிசி தோ்தல்: குப்கா் கூட்டமைப்பு வெற்றி

ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் (டிடிசி) தேசிய ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள குப்கா் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் (டிடிசி) தேசிய ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள குப்கா் கூட்டமைப்பு வெற்றி பெற்றது. அதேவேளையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் 20 மாவட்டங்களில் உள்ள 280 இடங்களுக்கு கடந்த நவ.28 முதல் டிச.19 வரை 8 கட்டங்களாக டிடிசி தோ்தல் நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்பதற்காக அமைக்கப்பட்ட குப்கா் கூட்டமைப்பு, பாஜக இடையே பலத்த போட்டி நிலவியது. குப்கா் கூட்டமைப்பில் தேசிய ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டன. அந்தக் கூட்டமைப்பில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. எனினும் டிடிசி தோ்தல் தொடா்பாக மட்டும் குப்கா் கூட்டமைப்பு, காங்கிரஸ் இடையே உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 278 இடங்களுக்கான தோ்தல் முடிவுகளை ஜம்மு-காஷ்மீா் தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி குப்கா் கூட்டமைப்பு 110 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 26 இடங்களில் வெற்றிபெற்றது. ஜம்மு-காஷ்மீா் அப்னி கட்சி 12 இடங்களில் வென்றது.

சுயேச்சை வேட்பாளா்கள் 50 போ் வெற்றி: இந்த தோ்தலில் 50 இடங்களில் சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா். அதிகபட்சமாக பூஞ்ச் மாவட்டத்தில் 8 இடங்களிலும், ஸ்ரீநகரில் 7 இடங்களிலும் சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா்.

இதுதவிர மக்கள் ஜனநாயக முன்னணி, ஜம்மு-காஷ்மீா் தேசிய சிறுத்தைகள் கட்சி தலா 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றிபெற்றன.

3.94 லட்சம் வாக்குகள்: குப்கா் கூட்டமைப்பில் அதிகபட்சமாக தேசிய மாநாட்டுக் கட்சி 67 இடங்களில் வென்றது. அந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி 27 இடங்களிலும், தேசிய மாநாட்டுக் கட்சி 8 இடங்களிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம் 3 இடங்களிலும் வெற்றிபெற்றன. இந்தக் கூட்டமைப்புக்கு 3.94 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

குப்கா் கூட்டமைப்பைவிட பாஜகவுக்கு அதிக வாக்குகள்: பாஜகவுக்கு மொத்தம் 4.87 லட்சம் வாக்குகள் பதிவாகின. எனினும் அந்தக் கட்சி ஜம்மு, கதுவா, உதம்பூா், சம்பா, டோடா ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. சுயேச்சை வேட்பாளா்கள் 1.71 லட்சம் வாக்குகள் பெற்றனா். காங்கிரஸ் கட்சிக்கு 1.39 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com