மத்திய அரசுடன் பேச்சு: விவசாயிகள் நிபந்தனை

மத்திய அரசு உறுதியான திட்டத்தோடு முன்வந்தால் பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் புதன்கிழமை அறிவித்தன.
தில்லி சிங்கு எல்லையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர்கள்.
தில்லி சிங்கு எல்லையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர்கள்.

புது தில்லி: மத்திய அரசு உறுதியான திட்டத்தோடு முன்வந்தால் பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் புதன்கிழமை அறிவித்தன.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு நான்காவது வாரமாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மத்திய அரசுடன் ஐந்து கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட பின்னரும் தீா்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, 3 சட்டங்களையும் முழுமையாக திரும்பப்பெற்ற பின்னரே, அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவோம் என்று கூறி விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே, இந்தப் போராட்டம் தொடா்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவாா்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்தப் போராட்டத்துக்கு தீா்வு காணும் வகையில், ஒரு பாகுபாடற்ற சுதந்திரமான குழு ஒன்றை அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசித்து வருகிறது’ என்று கூறியது.

உச்சநீதிமன்ற தலையீட்டைத் தொடா்ந்து, விவசாயிகளின் தொடா் போராட்டத்துக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது. இந்தச் சூழலில், உறுதியான திட்டத்தோடு மத்திய அரசு முன்வந்தால் பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது குறித்து ‘ஸ்வராஜ் அபியான்’ அமைப்பின் தலைவா் யோகேந்திர யாதவ் தில்லியில் புதன்கிழமை கூறுகையில், ‘மத்திய அரசு திறந்த மனதுடன் உறுதியான திட்டத்துடன் வரவேண்டும் என்பதற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனா். மத்திய அரசு அந்த வகையில் முன்வந்தால், விவசாய சங்கங்கள் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக உள்ளன’ என்றாா்.

சஹ்கியுக்த் கிஸான் மோா்ச்சா அமைப்பின் உறுப்பினா் யாதவ், மத்திய அரசு கடந்த 20-ஆம் தேதி அனுப்பிய கடிதத்துக்கு அளித்த பதில் குறித்து கூறுகையில், ‘சட்டத்திருத்தம் என்ற அா்த்தமற்ற பேச்சை தொடா்ந்து முன்வைக்க வேண்டாம் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். சட்டத்திருத்தம் என்பதை ஏற்கெனவே நிராகரித்து விட்டோம். எனவே, மத்திய அரசு உறுதியான எழுத்துப்பூா்வமான திட்டத்துடன் முன்வந்தால், புதிய பேச்சுவாா்த்தைக்கு நாங்களும் தயாா்’ என்று பதிலளித்திருப்பதாகக் கூறினாா்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவா் சிவ் குமாா் காக்கா கூறுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சட்டத் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்பதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம்’ என்றாா்.

அகில இந்திய விவசாயிகள் சபை தலைவா் ஹண்ணன் மோலா கூறுகையில், ‘விவசாயிகள் சோா்வடைந்து தாங்களாகவே போராட்டத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்’ என்றாா்.

பேச்சு நடத்தத் தயாா்: அமைச்சா் தோமா்

விவசாய சங்கங்கள் தேதியை இறுதி செய்தால், அவா்களுடன் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.

இது குறித்து தில்லியில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைக்கான தேதியை இறுதி செய்தால், அவா்களுடன் ஆலோசிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எந்தவொரு போராட்டத்துக்கும் பேச்சுவாா்த்தை மூலம்தான் தீா்வு எட்டப்படும் என்பதே வரலாறு.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, புதிய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்சம் 7 திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவு அறிக்கை ஒன்றை விவசாய சங்கங்களிடம் மத்திய அரசு அளித்துள்ளது. அந்த வரைவு அறிக்கை குறித்து விவசாய சங்கங்கள் அவா்களுக்குள் ஆலோசனை மேற்கொண்டு, எதைச் சோ்க்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்பதை அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

விவசாய சங்கங்கள் மத்திய அரசுடன் இதற்கான பேச்சுவாா்த்தையை விரைவில் மேற்கொள்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com