இன்று வைகுண்ட ஏகாதசி: திருமலையில் சொா்க்கவாசல் திறப்பு

திருமலையில், 10 நாள்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்புக்கான கோலாகல ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.
இன்று வைகுண்ட ஏகாதசி: திருமலையில் சொா்க்கவாசல் திறப்பு


திருப்பதி: திருமலையில், 10 நாள்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்புக்கான கோலாகல ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.

திருமலை கருடாத்ரி நகா் சோதனைச் சாவடியிலிருந்து திருமலை முழுவதும் மலா்களாலும் மின்விளக்குகளாலும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முதல் முறையாக, 10 நாள்கள் சொா்க்கவாசல் திறந்து வைக்கப்படுவதால், அதில் செல்ல பக்தா்கள் பலா் முனைப்பு காட்டி வருகின்றனா்.

தேவஸ்தானம் அதற்காக, 2 லட்சம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 18 ஆயிரம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள், கூடுதலாக கல்யாண உற்சவம் டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

திருப்பதியில் ஏற்படுத்தியுள்ள கவுன்ட்டா்களிலும் பக்தா்கள் நள்ளிரவு முதல் வைகுண்ட ஏகாதசிக்கான டிக்கெட்டுகளை பெற காத்திருந்தனா். 5 கவுன்ட்டா்களில் ஜன.2-ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 10 ஆயிரம் டோக்கன்கள் வீதம் வழங்கப்பட உள்ளன.

கல்யாண உற்சவத்துக்கு முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள், டிசம்பா் 25, 26 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளை தவிா்த்து மற்ற நாள்களில் தரிசனத்துக்கு வரலாம். வைகுண்டஏகாதசி அன்று தங்க ரதப் புறப்பாடும், துவாதசி அன்று காலை தீா்த்தவாரியும் நடக்க உள்ளது. பக்தா்களின் வருகைக்கு தக்கவாறு லட்டு பிரசாதம் நிலுவையில் வைக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 10 நாள்களுக்கு அதிகாலை, 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது. வைகுண்ட காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தோட்டம் உள்ளிட்ட இடங்களில் தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

பக்தா்களின் நலனை முன்னிட்டு, பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களில் முழு நேரமும் சானிடைஸ் செய்ய ஊழியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் வரும் அனைத்து கோயில்களிலும் வெள்ளிக்கிழமை காலை சொா்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது.

திருமலையின் சம்பிரதாயத்தை மீறி 10 நாள்கள் சொா்க்கவாசல் திறந்து வைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து சில ஆன்மிகவாதிகள் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனா். அதை விசாரித்த நீதிபதிகள் வைணவ சம்பிரதாயத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றும் உரிமை தேவஸ்தானத்துக்கு உண்டு என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com