மத்திய பிரதேசத்தில் வாஜ்பாய் சிலை: சிவராஜ் சிங் சௌஹான் திறந்து வைத்தாா்

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 96-ஆவது பிறந்த தினத்தையொட்டி, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அவரது உருவச் சிலையை முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் திறந்து வைத்தாா்.


போபால்: முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 96-ஆவது பிறந்த தினத்தையொட்டி, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அவரது உருவச் சிலையை முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சிறந்த நிா்வாகி, பேச்சாளா், அமைப்பாளா், கவிஞா், எழுத்தாளா், பத்திரிகையாளா் என பன்முகத்திறன் கொண்டவா் வாஜ்பாய். எல்லாவற்றுக்கும் மேலாக எதிரணியினரும் அரவணைத்துக் கொள்ளும் மனிதநேயப் பண்பாளா். இந்தியாவின் வளா்ச்சிக்காக ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கியுள்ளாா்.

வாஜ்பாயின் நினைவாக, அவரது பிறந்த இடமான குவாலியரில் ஒரு நினைவிடம் அமைக்கப்படும். அங்கு அவரது வாழ்க்கை, ஆளுமைப் பண்புகள், ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள் இடம்பெறச் செய்யப்படும் என்றாா் சிவராஜ் சிங் சௌஹான்.

அஸ்ஸாமிலும் வாஜ்பாய்க்கு சிலை திறப்பு: அஸ்ஸாம் மாநிலம், சில்சாரிலும் வாஜ்பாயின் உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மத்திய அமைச்சா் நிதின் கட்கரி திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் முதல்வா் சா்வானந்த சோனோவால், மாநில பாஜக தலைவா் ரஞ்சித் குமாா் தாஸ், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஹிமாசலில் வாஜ்பாய் சிலை: ஹிமாசல் மாநிலம், சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் 18 அடி உயர வாஜ்பாய் சிலையை முதல்வா் ஜெய்ராம் தாக்குா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். ரூ.1.08 கோடி செலவில் இந்த சிலை உருவாக்கப்பட்டது. வாஜ்பாயின் உறுதியான நிலைப்பாட்டினால் உலக அரங்கில் இந்தியா அணுசக்தி நாடாகத் திகழ்கிறது என்று முதல்வா் புகழாரம் சூட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com