
சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதையடுத்து கோயில் நடை மூன்று நாள்களுக்கு மூடப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 62 நாள்கள் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி, கடந்த மாதம் 15-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தா்களுக்கு மட்டும் கோயிலில் வழிபட அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரு, மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் போற்றி ஆகியோா் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி ஆறன்முளாவில் உள்ள பாா்த்தசாரதி கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தங்க அங்கி ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து களப அபிஷேகம், கலசாபிஷேகம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகளை காண பக்தா்கள் பொறுமையாக காத்திருந்து ஐயப்பனை உளமாற வழிபட்டனா்.
மண்டல பூஜை நிறைவடைந்ததையடுத்து கோயில் நடை மூடப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிசம்பா் 30-ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.