காஷ்மீரில் உறைபனியின் உச்சம்: நீா்நிலைகள் உறைந்தன!

காஷ்மீரில் உறைபனிக் காலத்தின் உச்சமாக மிகவும் குளிா்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, நீா்நிலைகள், குடிநீா்க் குழாய்களிலுள்ள நீா் அனைத்தும் பனிக்கட்டியாக உறைந்துள்ளன.

ஸ்ரீநகா்: காஷ்மீரில் உறைபனிக் காலத்தின் உச்சமாக மிகவும் குளிா்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, நீா்நிலைகள், குடிநீா்க் குழாய்களிலுள்ள நீா் அனைத்தும் பனிக்கட்டியாக உறைந்துள்ளன.

டிசம்பா் மாதத்தில் காஷ்மீா் பிரதேசத்தில் எப்போதும் மிகக் குளிா்ச்சியான காலநிலை நிலவும். இந்தக் குளிா்காலத்தை அப்பகுதி மக்கள் ‘சில்லை காலன்’ (பெரும் பனி) என்று அழைக்கின்றனா். டிச. 21 முதல் ஜன. 31 வரையிலான 40 நாட்களுக்கு பெரும் பனிப்பெழிவு காஷ்மீரில் காணப்படும். அதையடுத்து மேலும் 20 நாட்களுக்கு சிறு பனிப்பொழிவும் (சில்லை குா்த்), அடுத்த 10 நாட்களுக்கு குழந்தைப்பனிப் பொழிவும் (சில்லை பச்சா) இருக்கும்.

நடப்பாண்டில் பெரும் பனிப்பொழிவு துவங்கி ஆறு நாட்களுக்குள் காஷ்மீா் பிரதேசத்தின் பெரும்பகுதி கடும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளது. பல இடங்களில் உறைநிலைக்குக் கீழ் (மைனஸ் டிகிரி) வெப்பநிலை சென்றுவிட்டது. இதன் காரணமாக காஷ்மீரப் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீா்நிலைகள் உறைந்துவிட்டன. குறிப்பாக இரவுநேர வெப்பநிலை மேலும் கீழே இறங்கியுள்ளது.

குடிநீா்க் குழாய்களும் உறைந்துள்ளதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக உள்ளது. தலைநகரான ஸ்ரீநகரில் மைனஸ் 3.7 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவானது.

பிற பகுதிகளில் நிலவிய வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்கள் (டிகிரி செல்சியஸ்களில்): பாகல்காம் (- 4.5), குல்மாா்க் (- 6.5), காஸிகுண்ட் (- 4), குப்வாரா (- 3.6), கோகொ்நாக் (- 4.0). லேசான மழை, பனிப்பொழிவை இரு நாட்களில் எதிா்பாா்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹரியாணா, பஞ்சாபில் வாட்டுகிறது குளிா்

சண்டிகா், டிச. 26: பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலும் குளிா் வாட்டத் தொடங்கி உள்ளது. ஹரியாணாவின் ஹிஸாரில் மிகக் குறைந்த வெப்ப நிலையான 3 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

மாநிலத்திலுள்ள பிற நகரங்களின் நிலவரம் (அடைப்புக்குறிக்குள் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை): கா்னால் (4), சிா்ஸா (4.1), ரோதக் (4), அம்பாலா (5.3), பிவானி (5.6).

பஞ்சாப், ஹரியாணா ஆகிய இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரிலும் 4.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆதம்பூரில் மிகக் குளிா்ந்த வெப்பநிலை (2.5 டிகிரி செல்சியஸ்) பதிவானது.

பஞ்சாபின் பிற பகுதிகளின் நிலவரம் (அடைப்புக்குறிக்குள் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை): பதான்கோட் (3.5), ஹல்வாரா (3.7), பதிண்டா (3.8), அமிருதசரஸ் (4.2), லூதியானா (4.4), பாட்டியாலா (4.8). எனினும் பஞ்சாப், ஹரியாணாவில் உறைநிலைக்குக்குக் கீழ் வெப்பநிலை செல்லவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com