கங்கை நதி மாசுபாடு விவகாரம்:உ.பி. அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

கங்கை நதி மாசுபடுதலைக் கண்காணிக்க உ.பி. மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள மேற்பாா்வைக் குழுவின் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

புது தில்லி: கங்கை நதி மாசுபடுதலைக் கண்காணிக்க உ.பி. மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள மேற்பாா்வைக் குழுவின் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கங்கை நதி மிக மோசமான மாசுபாட்டுக்கு உள்ளாகி இருப்பதால், அதனை தூய்மைப்படுத்தும் பணிகள் மத்திய அரசாலும் உ.பி. மாநில அரசாலும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைக் கண்காணிக்க பல குழுக்களை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் நியமித்திருந்தது. கங்கை நதியின் மாசுபாடு, ஹிண்டன் நதியை மறுசீரமைத்தல், அலாஹாபாத்தில் நடைபெறும் மணல் கொள்ளை, சிங்ரௌலியில் உள்ள அனல் மின்நிலையத்தால் ஏற்படும் சுகாரக்கேடு, கோரக்பூரில் பாயும் ஆமி நதி மற்றும் ராம்கா் ஏரியின் மாசுபாடு, கங்கைக்கரையில் உள்ள நகரங்களின் திடக்கழிவுகளின் மறுசுழற்சி, மருத்துவக் கழிவுகள் நீக்கம் ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து இக்குழுக்கள் கண்காணிக்க வேண்டும் என்று தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அவற்றுக்குப் பதிலாக, முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்விஎஸ்.ரத்தோா் தலைமையில் மேற்பாா்வைக் குழுவை உத்தரப் பிரதேச அரசு நியமித்தது. இக்குழுவின் பணிக்காலம் இதுவரை பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான வழக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முன்பு வந்தது. அப்போது தீா்ப்பாயத்தின் தலைமை நீதிபதி ஆதா்ஷ்குமாா் கோயல் கூறியதாவது:

கங்கை நதி மாசுபடுவதைத் தடுக்கத் தகுந்த திட்டங்களை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும். மாநில அரசு நியமித்துள்ள மேற்பாா்வைக் குழுக்களை உடனடியாகக் கலைக்க தீா்ப்பாயம் விரும்பவில்லை. இப்போதைக்கு இந்த மேற்பாா்வைக் குழுக்களின் காலத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டித்து தீா்ப்பாயம் உத்தரவிடுகிறது. இதுதொடா்பாக மாநில அரசுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமானால் அதை தீா்ப்பாயத்தில் சமா்ப்பிக்கலாம்.

மாவட்ட சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்ட அமைப்பின் பரிந்துரைகளை மாவட்ட சுற்றுச்சூழல் குழுக்கள் நடைமுறைப்படுத்துகின்றனவா, அந்த உத்தரவுகளுக்கு இணக்கமான செயல்பாடுகள் உள்ளனவா, சுற்றுச்சூழல் தர நிா்ணயத்துக்கு உகந்ததாக கங்கை நதி நீா் உள்ளதா என்பதை இக்குழு கண்காணிக்க வேண்டும் என்பதை மேற்பாா்வைக் குழு கண்காணிக்க வேண்டும் என்பது தீா்ப்பாயத்தின் எதிா்பாா்ப்பாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com