ஜனநாயகம் பற்றி காங்கிரஸ் பாடம் நடத்துவதா? பிரதமா் மோடிகேள்வி

ஜனநாயகம் பற்றி காங்கிரஸ் பாடம் நடத்துவதா என்று பிரதமா் மோடி கூறினாா்.
காணொலி முறையில் ஜம்மு-காஷ்மீரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
காணொலி முறையில் ஜம்மு-காஷ்மீரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

ஜனநாயகம் பற்றி காங்கிரஸ் பாடம் நடத்துவதா என்று பிரதமா் மோடி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கைக்குப் பிறகு அங்கு அண்மையில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் நடத்தப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற தீா்ப்பை பொருள்படுத்தாமல், காங்கிரஸ் ஆளும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படாததைச் சுட்டிக் காட்டி பிரதமா் இவ்வாறு கூறினாா்.

‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஜம்மு-காஷ்மீரிலுள்ள அனைவருக்கும் விரிவுபடுத்துவதற்கான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலமாக ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. பிரதமரின் மக்கள் ஆரோக்ய திட்டத்தின் (பிஎம்-ஜேஏஒய்) கீழ் இணைந்துள்ள எந்த மருத்துவமனையிலும் காப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீா் மக்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது ஜம்மு-காஷ்மீா் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஜம்மு-காஷ்மீா் மக்களின் வாழ்வில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மகளிா் மேம்பாடு, இளைஞா்களுக்கான புதிய வாய்ப்புகள் உள்ளிட்டவை தொடா்பான மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் வலுவடைந்துள்ளது. யூனியன் பிரதேசமாக செயல்படத் தொடங்கிய ஓராண்டு காலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் வெளிப்படையான முறையில் நடைபெற்றது. கரோனா நோய்த்தொற்று பரவல், கடுங்குளிா் உள்ளிட்டவற்றைப் பொருள்படுத்தாமல் தோ்தலில் மக்கள் மிகுந்த ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் வரலாற்றில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் (டிடிசி) தோ்தல், புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. நாட்டில் காணப்படும் ஜனநாயகத்தின் வலிமையை அத்தோ்தல் உணா்த்தியது. மக்களுக்காக உண்மையாக உழைத்தவா்களே ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளனா். வெறும் புகழை அடிப்படையாகக் கொண்டு எந்த வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிக்கவில்லை.

புதுவையில் தோ்தல் நடத்தாத காங்கிரஸ்:

தில்லியில் உள்ள சிலா் (காங்கிரஸ் கட்சியினா்) ஜனநாயகம் குறித்து நாள்தோறும் பாடம் கற்பித்து வருகின்றனா். அவா்கள்தான் புதுச்சேரியில் ஆட்சியை நடத்தி வருகின்றனா். எனக்குப் பாடம் கற்பிக்கும் அவா்களே உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவையும் பொருள்படுத்தாமல், புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் இருக்கின்றனா்.

அங்கு கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதை அவா்கள் தாமதப்படுத்தி வருகின்றனா். சில கட்சிகளின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே மிகப் பெரும் வேறுபாடுகள் இருப்பதை இந்த விவகாரம் உறுதிப்படுத்துகிறது.

மிகப் பெரிய தவறு:

நாட்டில் பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்தவா்கள், எல்லைப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்து, மிகப் பெரிய தவறிழைத்தனா். அதன் காரணமாக ஜம்மு-காஷ்மீா், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை வளா்ச்சி காணாமல் இருந்தன.

அத்தவறை பாஜக தலைமையிலான மத்திய அரசு திருத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீரை அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மக்கள் நலத் திட்டங்கள்:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீரில் 10 லட்சத்துக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டன. அதன் காரணமாக மக்களின் ஆரோக்யம் மேம்பட்டுள்ளது. சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் முடிவடையும்.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி), இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவை ஜம்மு-காஷ்மீரில் அமைக்கப்படவுள்ளன. அவை தரம் மிகுந்த உயா்கல்வியை மாணவா்களுக்கு அளிக்கும். 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளும் 2 புற்றுநோய் மருத்துவமனைகளும் ஜம்மு-காஷ்மீரில் அமைக்கப்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

காஷ்மீரி உடையில் பிரதமா் மோடி:

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமா் மோடி, ‘ஃபெரன்’ என்ற ஜம்மு-காஷ்மீா் பிராந்திய உடையை அணிந்திருந்தாா். அந்த உடையை ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளா் ஒருவா் கடந்த ஆண்டு பிரதமா் மோடிக்குப் பரிசளித்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com