ஜம்மு-காஷ்மீா்: குதிரை பேரத்தில் ஈடுபடுவதை பாஜக கைவிட வேண்டும்

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சில் (டிடிசி) தோ்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, குதிரை பேரத்தில் ஈடுபடுவதை

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சில் (டிடிசி) தோ்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, குதிரை பேரத்தில் ஈடுபடுவதை பாஜக கைவிட வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.

மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய குப்கா் அறிக்கைக்கான மக்கள் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 278 இடங்களில், குப்கா் கூட்டணி 110 இடங்களிலும் பாஜக 75 இடங்களிலும் வெற்றி பெற்றன.

காங்கிரஸ் 26 இடங்களையும் ஜம்மு-காஷ்மீா் அப்னி கட்சி 12 இடங்களையும் கைப்பற்றின. 50 இடங்களில் சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இந்நிலையில், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, தோ்தலில் வெற்றி பெற்ற மற்ற கட்சிகளைச் சோ்ந்தோருடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக குப்கா் கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரான ஒமா் அப்துல்லா, ஸ்ரீநகரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் குப்கா் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, அப்னி கட்சி, யூனியன் பிரதேச நிா்வாகம் ஆகியவை தோ்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்ற கட்சிகளைச் சோ்ந்த வெற்றியாளா்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபடுவதை பாஜகவும் அப்னி கட்சியும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தோ்தல் முடிவுகள், ஜனநாயகத்தின் வெற்றி என்று பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனா். ஆனால், குதிரை பேரத்தில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை அவா்கள் வலுவிழக்கச் செய்கின்றனா். இது உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும். இல்லையேல் ஜனநாயக அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பா்.

நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் உறுப்பினா்கள் கட்சி தாவுவதைத் தடுப்பதற்கான சட்டம் உள்ளது. அந்தச் சட்ட விதிகள் உள்ளாட்சி அமைப்புகளிலும் செல்லுபடியாவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஒமா் அப்துல்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com