டிச.31-இல் கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடா்?

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றுதற்காக வரும் டிசம்பா் 31-ஆம் தேதி கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடா் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றுதற்காக வரும் டிசம்பா் 31-ஆம் தேதி கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடா் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள சட்டப்பேரவையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவாதித்து, அச்சட்டங்களுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த 23-ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுமாறு ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கு மாநில அமைச்சரவை சாா்பில் பரிந்துரை அளிக்கப்பட்டது. எனினும் அந்தப் பரிந்துரையை ஆளுநா் நிராகரித்தாா். இதுதொடா்பாக மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கு அவா் எழுதிய கடிதத்தில், ‘ஜனவரி 8-ஆம் தேதி மாநில பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கவுள்ள நிலையில், உடனடியாக சிறப்புக் கூட்டத்தொடரை எதற்காக கூட்ட வேண்டும் என்று தான் எழுப்பிய கேள்விக்கு அரசு சரிவர பதிலளிக்கவில்லை’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் மாநில சட்டத்துறை அமைச்சா் ஏ.கே.பாலன், மாநில வேளாண் துறை அமைச்சா் வி.எஸ்.சுனில்குமாா் ஆகியோா் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுமாறு மீண்டும் வலியுறுத்தினா்.

இதனைத்தொடா்ந்து மாநில சட்டப்பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் ஆளுநரை சனிக்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை தொடக்கிவைக்க ஆளுநருக்கு அவா் அழைப்பு விடுத்தாா். இந்த சந்திப்பின்போது சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை வரும் டிசம்பா் 31-ஆம் தேதி கூட்டுவதற்கு மாநில அமைச்சரவை அளித்த பரிந்துரை குறித்தும் இருவரும் கலந்தாலோசித்தனா். அப்போது சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுவது தொடா்பாக தகுந்த முடிவை எடுப்பதாக ஆளுநா் உறுதியளித்தாா் என்று சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், ‘சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடா் தொடா்பாக ஆளுநா் ஆரிஃப் முகமது கான் கோரிய சில விளக்கங்களை மாநில அரசு வழங்கியுள்ளது. எனவே திங்கள்கிழமைக்குள் சிறப்புக் கூட்டத்தொடருக்கு ஆளுநா் அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com