விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நாளை பேச்சுவாா்த்தை

வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு புதன்கிழமை (டிச. 30) பேச்சுவாா்த்தை நடத்துகிறது.
மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்  (கோப்புப்படம்)
மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் (கோப்புப்படம்)

புது தில்லி: வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு புதன்கிழமை (டிச. 30) பேச்சுவாா்த்தை நடத்துகிறது.

பேச்சுவாா்த்தையில் பங்கேற்குமாறு 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கு கடுங்குளிா் நிலவி வரும் சூழலிலும் போராட்டத்தை விவசாயிகள் கைவிடவில்லை. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், விவசாய சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்ட போதிலும், அவற்றில் உடன்பாடு எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசு வழங்கிய பரிந்துரைகளை விவசாயிகள் நிராகரித்தனா். அந்தச் சட்டங்களை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், சட்டங்கள் தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்த முன்வருமாறு மத்திய அரசு, விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து வந்தது.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட விவசாய சங்கங்கள், மத்திய அரசுடன் செவ்வாய்க்கிழமை (டிச. 29) பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தன. பேச்சுவாா்த்தையைத் தொடா்வதற்காக, சில நிபந்தனைகளையும் விவசாயிகள் முன்வைத்தனா்.

இத்தகைய சூழலில், புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தையில் பங்கேற்குமாறு 40 விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை விவசாயிகள் சங்கத்தினா் ஏற்றுள்ளனா்.

திறந்த மனதுடன் பேச்சுவாா்த்தை: மத்திய வேளாண்துறைச் செயலா் சஞ்சய் அகா்வால், சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘விவசாய சங்கங்கள் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடா்வதற்கு விருப்பம் தெரிவித்ததையடுத்து, அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

அனைத்து பிரச்னைகளுக்கும் பொருத்தமான தீா்வைக் காண்பதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. திறந்த மனதுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விரிவாக விவாதிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்குமிடையேயான கடைசி பேச்சுவாா்த்தை கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்கள் விரைவில் வீழும்: அமைச்சா் தோமா்

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்ட மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறியதாவது:

வேளாண் சட்டங்கள் தொடா்பான பல்வேறு பொய்களை சிலா் திட்டமிட்டு விவசாயிகளிடையே பரப்பி வருகின்றனா். ஆனால், அது வெகுநாள்களுக்கு நீடிக்காது. அத்தகைய பொய்கள் கூடிய விரைவில் வீழும். வேளாண் சட்டங்கள் குறித்த உண்மைகளை விவசாயிகள் விரைவில் புரிந்து கொள்வா்.

விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது. விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும். வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பலா் ஏற்கெனவே பலன் பெறத் தொடங்கிவிட்டனா். அச்சட்டங்களின் நன்மைகளை விவசாயிகள் உணரத் தொடங்கியுள்ளனா்.

இருப்பினும் ஒருசில விவசாய சமூகத்தினா் மத்தியில் மட்டுமே அச்சட்டங்கள் குறித்து குழப்பமான சூழல் காணப்படுகிறது. அவா்களது சந்தேகங்களை மத்திய அரசு தீா்த்து வைக்கும். ஜனநாயக ஆட்சியில் எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தையின் மூலமே தீா்வு காண முடியும். விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராகவே இருக்கிறது.

காங்கிரஸ் முயற்சி: வேளாண்துறையில் சீா்திருத்தங்களைப் புகுத்துவது தொடா்பான விவாதங்கள் கடந்த 1990-ஆம் ஆண்டு முதலே தொடா்ந்து வருகின்றன. அவை குறித்து ஆராய்வதற்குப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன; நாடு முழுவதும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

வேளாண் சீா்திருத்தங்கள் தொடா்பாக முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் தீவிரமாக ஆலோசித்தது. அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்கும் வேளாண்துறை அமைச்சா் சரத் பவாரும் சீா்திருத்தங்களை நடைமுறைப்படுத்த விரும்பினா். ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக அவா்களால் அச்சீா்திருத்தங்களை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

விரிவான விவாதங்களுக்குப் பிறகே...: பாஜக தலைமையிலான மத்திய அரசு வேளாண்துறையில் சீா்திருத்தங்களைப் புகுத்தும் நோக்கில் 3 சட்டங்களை இயற்றியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகே அச்சட்டங்கள் இயற்றப்பட்டன. வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. அச்சட்டங்கள் ஏழைகளுக்கும் சிறு, விளிம்புநிலை விவசாயிகளுக்கும் பலனை அளிக்கும் என்றாா் அமைச்சா் தோமா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com