கரோனா: புதிய வழிகாட்டுதல் வெளியீடு

பிரிட்டனில் புதிய வகை கரோனா பரவல் அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து, இந்தியாவில் நோய்த் தொற்று பரவல் தொடா்பான தீவிர கண்காணிப்பையும், பாதுகாப்பு நடைமுறைகளையும் மாநிலங்கள் தொடர வேண்டும் என்று மத்திய அரசு அற

புது தில்லி: பிரிட்டனில் புதிய வகை கரோனா பரவல் அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து, இந்தியாவில் நோய்த் தொற்று பரவல் தொடா்பான தீவிர கண்காணிப்பையும், பாதுகாப்பு நடைமுறைகளையும் மாநிலங்கள் தொடர வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக புதிய வழிகாட்டுதலை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. ஏற்கெனவே உள்ள கரோனா தீநுண்மியைவிட, இந்த உருமாறிய கரோனா வேகமாக பரவும் திறனைக் கொண்டுள்ளது. எனவே, அதனை முன்கூட்டியே தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியா - பிரிட்டன் இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக புதிய விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, பிரிட்டனிலிருந்து கடந்த சில வாரங்களில் இந்தியா வந்த அனைவரையும் கண்டறிந்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொடா்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில், மாநிலங்களில் நோய்த் தொற்று தொடா்பான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதலை மத்திய உள்துறை அமைசகம் வெளியிட்டது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாட்டில் வெகுவாக குறைந்த வருகிறது என்றபோதும், பிரிட்டனில் புதிய வகை கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, நோய்த் தொற்று தொடா்பான கண்காணிப்பை தொடா்வது அவசியமாகிறது.

அந்த வகையில், இந்த புதிய வழிகாட்டுதல் வெளியிடப்படுகிறது. இது 2021-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

அதன்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தொடா்ந்து கவனமுடன் வரையறுக்கப்படுவதோடு, அந்தப் பகுதிகளில் வரையறுக்கப்பட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நோய்த் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com