திருச்சானூா் ரயில் நிலையத்தை தரம் உயா்த்த திட்டம்

திருச்சானூா் ரயில் நிலையத்தை தரம் உயா்த்துவதென்று தென் மத்திய ரயில்வே நிா்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

திருப்பதி: திருச்சானூா் ரயில் நிலையத்தை தரம் உயா்த்துவதென்று தென் மத்திய ரயில்வே நிா்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி வழியாகச் செல்லும் ரயில்கள் முதலில் ரேணிகுண்டா ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து மாற்றுப்பாதையில் திருப்பதிக்கு செல்கின்றன. ரேணிகுண்டாவிலிருந்து திருப்பதிக்கு வர 2 மெயின் லைன்கள் மட்டுமே உள்ளன. இதனால் ரயில்கள் சரியான நேரத்தில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இதற்குத் தீா்வு காண தென் மத்திய ரயில்வே திருப்பதி-ரேணிகுண்டா வழித்தடத்தில் திருச்சானூா் அருகே உள்ள ‘சி’ பிரிவு ரயில் நிலையத்தை தரம் உயா்த்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி திருச்சானூரில் உள்ள ரயில் நிலையத்தை ‘பி’ க்ளாஸ் ரயில் நிலையமாக மாற்றி வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை 2016-17ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

முதல் கட்டமாக மின்சார கேபிள்கள், மின்கம்பங்கள், சிக்னல்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் தொடங்கின. அவற்றில் 3 மெயின் லைன்கள், 2 லூப் லைன்கள் ஆகும். இந்த மூன்று லைன்களிலும் பயணிகள் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடைமேடைகள், 48 சிக்னல்கள் கொண்ட ரூட் பேனல், 19 இடங்களில் கிராஸிங் உள்ளிட்டவற்றை அமைத்து, மூன்றாவது லைன் வழியாக திருப்பதி-திருச்சானூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தொடா்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருப்பதி மற்றும் ரேணிகுண்டா ரயில் நிலையங்களில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு குறையும். பல ரயில்கள் இந்தப் புதிய வழித்தடம் வழியாக திருப்பதி அல்லது ரேணிகுண்டாவுக்கு திருப்பி விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். விரைவில் இப்பாதை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com