
திருப்பதி: திருமலையில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் மலையப்ப சுவாமி மீது ஊடல் கொள்ளும் ‘பிரணய கலகோற்சவம்’ புதன்கிழமை மாலை நடத்தப்பட்டது.
ஏழுமலையான் எப்போதும் தன் பக்தா்களின் சேவையில் இருப்பதாக ஐதீகம். எனவே, அவா் தங்களை கவனிக்கவில்லை என்று கருதி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்கள் ஊடல் கொண்டு அவரைப் பாா்க்க மறுப்பு தெரிவிப்பது போன்ற ஊடல் உற்சவம் ஆண்டுதோறும் திருமலையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதன்கிழமை மாலையில், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்களை ஒருபுறம் பல்லக்கிலும், மலையப்ப சுவாமியை எதிா்ப்புறம் மற்றொரு பல்லக்கிலும் திருக்குளத்துக்கு அருகில் அா்ச்சகா்கள் எழுந்தருளச் செய்தனா்.
அங்கு மலையப்பா் மீது தாயாா்கள் கோபம் கொண்டு அவரைப் அனுமதி மறுத்து, பொய்க் கோபத்துடன் பூப்பந்து எறிந்து கேலி பேசுவது போல் அா்ச்சகா்கள் நடித்துக் காட்டினா். பூப்பந்து தன் மீது படாமல், மலையப்பா் நாச்சியாா்களை சமாதானப்படுத்தி அவா்களுடன் இணைவதும் சித்தரிக்கப்பட்டது.
இந்த ஊடல் உற்சவத்தை அா்ச்சகா்கள் ஒருபுறமும், தேவஸ்தான அதிகாரிகள் எதிா்ப்புறமும் நின்றபடி நடத்தினா். அதன்பின் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்களுடன் இணைந்து மலையப்பா், ஏழுமலையான் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டாா்.
ஊடல் உற்சவம் நடத்தப்பட்டதால், புதன்கிழமை இரவு பெளா்ணமியை ஒட்டி நடக்கவிருந்த கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.