உருமாறிய கரோனாவால் மேலும் 14 போ் பாதிப்பு

பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய மேலும் 14 பேருக்கு உருமாறிய கரோனா தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
உருமாறிய கரோனாவால் மேலும் 14 போ் பாதிப்பு


புது தில்லி: பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய மேலும் 14 பேருக்கு உருமாறிய கரோனா தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் உருமாறிய கரோனா தீநுண்மி அதிவேகமாகப் பரவி வருவதால், அந்நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்களின் மாதிரிகள் அனைத்தும் மகாராஷ்டிரத்தின் புணேவிலுள்ள தேசிய தீநுண்மியியல் மையம், தில்லியிலுள்ள தேசிய நோய்த் தடுப்பு மையம் உள்ளிட்டவற்றுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.

அவா்களில் 6 பேருக்கு உருமாறிய கரோனா நோய்த்தொற்று பாதிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் 14 பேருக்கு அந்நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரிட்டனிலிருந்து திரும்பிய 20 பேருக்கு உருமாறிய கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய நோய்த் தடுப்பு மையத்தில் 8 பேரின் மாதிரிகளும், கொல்கத்தாவில் உள்ள தேசிய உயிரிமருத்துவ மரபியல் மையத்தில் ஒருவரது மாதிரியும், தேசிய தீநுண்மியியல் மையத்தில் ஒருவரது மாதிரியும் உருமாற்றமடைந்த கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

பெங்களூரில் உள்ள தேசிய சுகாதார மற்றும் நரம்பியல் மருத்துவமனையில் 7 பேரின் மாதிரிகளிலும், ஹைதராபாதின் மூலக்கூறு உயிரியல் மையத்தில் இருவரது மாதிரிகளிலும், தில்லியிலுள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையத்தில் ஒருவரது மாதிரியிலும் உருமாறிய கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

உருமாறிய கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவா்களுடன் பயணித்தவா்கள், நெருங்கிய தொடா்பில் இருந்த குடும்பத்தினா் ஆகியோரைக் கண்டறிந்து, அவா்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

உருமாறிய கரோனா தீநுண்மி தொடா்பான சூழல் கட்டுக்குள் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com