Enable Javscript for better performance
நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு: அக்ஷய்குமார் மனு அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு: அக்ஷய்குமார் மனு அளிப்பு  

    By நமது நிருபர்  |   Published on : 02nd February 2020 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2012-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நான்கு பேரில் ஒருவரான வினய் குமார் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
     கடந்த புதன்கிழமை வினய்குமார் சர்மா, தனது வழக்குரைஞர் ஏ.பி.சிங் மூலம் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தூக்குத் தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார், சனிக்கிழமை குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளார். தூக்குத் தண்டனை குற்றவாளிகள் நால்வரில் முகேஷ் சிங்கின் கருணை மனுவை கடந்த மாதம் குடியரசுத் தலைவர் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
     கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி துணை மருத்துவ மாணவி "நிர்பயா' தெற்கு தில்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
     இந்தக் குற்றச்சம்பவம் தொடர்பாக முகேஷ், வினய், அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா, ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில், முக்கியக் குற்றவாளியான ராம்சிங், சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கைது செய்யப்பட்ட சிறுவன், சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
     முகேஷ், வினய், அக்ஷய், பவன் குப்தா ஆகிய நான்கு பேருக்கும் 2013-இல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அவர்களின் தண்டனையை உறுதி செய்தது. இதனிடையே, குற்றவாளிகள் நான்கு பேரும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிடப்படுவார்கள் என தில்லி நீதிமன்றம் அறிவித்து அதற்கான வாரண்டையும் பிறப்பித்தது.
     எனினும், முகேஷ் சிங், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் திட்டமிட்டபடி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாது என்று தில்லி அரசு, உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. பின்னர், முகேஷ் சிங்கின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், நான்கு பேருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று தில்லி நீதிமன்றம் மீண்டும் அறிவித்தது. ஆனால், தில்லி நீதிமன்றத்தின் புதிய உத்தரவு காரணமாக தூக்குத் தண்டனை மறுதேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
     மத்திய அரசு மனு மீது இன்று விசாரணை
     நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மத்திய அரசு தாக்குதல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
     இது தொடர்பாக இந்த வழக்கில் குற்றவாளிகளான நான்கு பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சுரேஷ் கெய்ட் உத்தரவிட்டார். மேலும், "மத்திய அரசின் மனு மீது உங்கள் நிலை என்ன' என்று கேட்டு திகார் சிறை அதிகாரிகளுக்கும், சிறைத் துறை டி.ஜி.க்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைத் துறை அதிகாரி சார்பில் ஆஜரான வழக்குரைஞரும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதில் தருவதற்கு சம்மதித்தார்.
     இது தொடர்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நிர்பயா குற்றவாளிகள் சட்டத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டுள்ளனர். தாங்கள் தூக்கிலிடப்படுவதை தவிர்ப்பதற்கான தந்திர வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கொடூர குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகள், நாட்டு மக்களின் பொறுமையைச் சோதித்து வருகின்றனர்' என்று அவர் குறிப்பிட்டார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai