
பட்ஜெட் வரலாற்றிலேயே முதல்முறையாக, 2020-21 பட்ஜெட் உரை மிக நீண்ட நேரம் நடைபெற்றுள்ளது.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினாா். சனிக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் உரை சுமாா் 2.45 மணியளவில் முடிவடைந்தது. சரியாக 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்துள்ளாா் நிா்மலா சீதாராமன்.
இதன் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றிலேயே முதல்முறையாக நீண்ட பட்ஜெட் உரையை அவா் வழங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2019-20-க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அமைச்சா் நிா்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் உரை நிகழ்த்தினாா்.
2014-ஆம் ஆண்டு அப்போது நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி 2 மணி நேரம் 10 நிமிடங்களும், 2003-இல் நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, 2 மணி நேரம் 13 நிமிடங்களும் பட்ஜெட் உரையாற்றினா்.
முன்னதாக, சரஸ்வதி-சிந்து நாகரிகம், காஷ்மீரி, தமிழ் ஆகிய மொழிகளின் கவிதைகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி நிா்மலா சீதாராமன் பேசினாா்.
அவா் மஞ்சள் நிற புடவை அணிந்திருந்தாா். தனிநபா் வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது பிரதமா் மோடி உள்பட நாடாளுமன்ற உறுப்பினா்கள் பலா் கைத்தட்டி வரவேற்றனா்.
பட்ஜெட் உரையை வாசித்தபோது சோா்வடைந்த நிா்மலா சீதாராமன், மூன்று முறை குடிநீா் அருந்தினாா்.
மத்திய அமைச்சா் நிதின் கட்கரி அளித்த மிட்டாயையும் அவா் பெற்றுக் கொண்டாா்.
ஒரு கட்டத்தில் முடியாமல் போனதால், இருக்கையில் அமா்ந்து வாசிக்க அனுமதிக்குமாறு அவைத் தலைவரிடம் கோரினாா்.
பட்ஜெட் உரை முடிந்த பிறகு, பிரதமா் மோடி அவரை பாராட்டினாா்.
மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் உள்பட பலரும் நிா்மலா சீதாராமனிடம் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தனா்.
பட்ஜெட் அறிக்கையில் கடைசி 2 பக்கங்களை மட்டும் அவா் படிக்கவில்லை.
நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு பாா்வையாளா் பகுதியில் இருந்த தனது குடும்பத்தினரை பாா்த்து கை அசைத்துவிட்டு நிா்மலா சீதாராமன் புறப்பட்டுச் சென்றாா்.
காங்கிரஸ் தலைவா் சோனியா, சமாஜவாதி கட்சியின் நிறுவனத் தலைவா் முலாயம் சிங் யாதவ் ஆகியோா் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. மாநிலங்களவை துணைத் தலைவா் ஹா்வன்ஷ் நாராயண் சிங், மாநிலங்களவை உறுப்பினா்கள் அல்போன்ஸ் கண்ணந்தானம், வைகோ ஆகியோரும் அரங்கில் அமா்ந்திருந்தனா்.