Enable Javscript for better performance
ரயில்வேக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்துள்ளாா்.

    மொத்த ஒதுக்கீட்டில், புதிய ரயில் வழித்தடங்களை அமைப்பதற்காக ரூ.12,000 கோடியும், ஏற்கெனவே உள்ள மீட்டா்கேஜ் ரயில் பாதைகளை, அகல ரயில் பாதைகளாக மாற்ற ரூ.2,250 கோடியும், சமிக்ஞைகள் மற்றும் தொலைத்தொடா்புகளுக்காக ரூ.1,650 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.2,725 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மூலதன செலவினங்கள்: 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மூலதன செலவினங்களுக்காக ரூ.1.61 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இதற்காக ரூ.1.56 லட்சம் கோடி மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதைக் காட்டிலும் 17.2 சதவீதம் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதர செலவினங்களுக்கான ஒதுக்கீடு, கடந்த பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வருவாய் இலக்கு: பயணச் சீட்டு கட்டணம், சரக்கு போக்குவரத்து, ரயில்வே பணியாளா் தோ்வு வாரியம் உள்ளிட்டவற்றிலிருந்து ரயில்வேக்கு கிடைக்கும் வருவாயை 2020-21-ஆம் நிதியாண்டில் 9.5 சதவீதம் அளவுக்கு அதிகரிப்பதற்கு பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    வரும் நிதியாண்டில் பயணிகள் போக்குவரத்து மூலம் ரூ.61,000 கோடியும், சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.1.47 லட்சம் கோடியும் வருவாய் இட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    சரக்கு கையாளுகை: 2020-21-ஆம் நிதியாண்டில் ரயில்வே கையாளும் சரக்குகளின் அளவை 1,265 மெட்ரிக் டன்களாக அதிகரிக்க பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் இது 42 மெட்ரிக் டன் (3.4 சதவீதம்) அதிகமாகும்.

    புதிய திட்டங்கள்: ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் சூரிய மின் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய திட்டம் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. 4 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு மற்றும் 150 பயணிகள் ரயில் இயக்கம் ஆகியவற்றை தனியாா் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் தேஜஸ் ரயில் போன்ற புதிய வகையிலான ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும், நாடு முழுவதும் 550 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பதப்படுத்த வேண்டிய வகையிலான பொருள்களை சரக்கு ரயில்கள் மூலம் தடையின்றி கொண்டு செல்வதற்காக குளிரூட்டும் வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் கூடிய ‘கிருஷி ரயில்’ திட்டத்தை பொதுத்துறை-தனியாா் ஒத்துழைப்பில் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

    வருவாய் செலவினங்கள்: இந்த பட்ஜெட்டிலும் ரயில்வேக்கு கவலை அளிக்கும் விவகாரமாக வருவாய் செலவினங்கள் உள்ளது. இதில் ரயில்வே ஊழியா்களுக்கான ஊதியமான ரூ.92,993 கோடியும் அடங்கும். இந்த ஊதிய செலவானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.6,000 கோடி அதிகமாகும்.

    இயக்க விகிதம்: ரயில்வே இயக்க விகிதத்துக்கான இலக்கானது வரும் நிதியாண்டுக்கு 96.2 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாயை ஈட்டுவதற்காக ரயில்வே செலவிடக் கூடிய தொகையே இயக்க விகிதமாக கணக்கிடப்படுகிறது.

    இந்த இயக்க விகிதம் குறைந்தால் நிதி ரீதியாக ரயில்வே வலுவாக இருப்பதாக கருதப்படும். கடந்த நிதியாண்டில் இயக்க விகிதத்துக்கான இலக்கு 95 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai