Enable Javscript for better performance
Do Nirbhaya convicts hanging teach us a lesson- Dinamani

சுடச்சுட

  

  பாலியல் வன்கொடுமைக்குப் பின்னுள்ள சமூக மனநிலை.. கேள்வி எழுப்புவது எப்போது?

  By சுவாமிநாதன்  |   Published on : 02nd February 2020 05:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Nirbhaya_PTI1


  தில்லியில் 7 ஆண்டுகளுக்கு முன், கடந்த 2012 டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் நிர்பயா என்று பின்னர் பெயர் சூட்டப்பட்ட துணைநிலை மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர்,  அரசின் உதவியுடன் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இந்தச் சம்பவம் தில்லி மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. எந்தவோர் அரசியல் தலைமையின் அழைப்பும் இல்லாமலேயே, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, இந்தச் சம்பவம் அதிகளவில் கவனம் ஈர்த்து அப்போது ஆட்சியில் இருந்த மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் என்பவர் தில்லி திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மற்றொருவர் சிறார் என்பதால், இந்த வழக்கில் அவர் மூன்றாண்டுகளுக்கு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார். மூன்றாண்டு தண்டனைக்குப் பிறகு அவர் வெளியே வந்துவிட்டார்.

  இந்த வழக்கு விசாரணையின் முடிவில் மற்ற நால்வரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தில்லி நீதிமன்றத்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் விரைவில் தூக்கிலிடப்படவுள்ளனர்.

  இந்த மரண தண்டனையை ரத்து செய்யவும், முடிந்த அளவுக்குத் தள்ளிப்போடவும் மேல்முறையீடு, கருணை மனு, சீராய்வு மனு, கருணை மனு நிராகரிப்பை நீதித் துறை ஆய்வுக்குள்படுத்த வேண்டும் எனத் தங்களால் முடிந்தளவுக்கு அனைத்து வகையான சட்ட முயற்சிகளையும் குற்றவாளிகள் மேற்கொண்டனர். ஆனால், அவை எல்லாம் தூக்கிலிடும் தேதியைச் சற்றுத் தள்ளிப்போடுவதற்கு மட்டுமே அவர்களுக்கு உதவியுள்ளன.

  ஒருவேளை சட்ட ரீதியாக இவர்களுக்குக் கருணை அளிக்கப்பட்டு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க் குறைக்க இந்தச் சட்டம் வழி வகுத்திருந்தாலோ, குறைந்தபட்சம் தூக்கிலுடும் தேதியை மேலும் மேலும் தள்ளிப்போட சட்டம் உதவியிருந்தாலோ மக்கள் அதனை எப்படி அணுகுவார்கள்? சட்டத்தின்படியே அவர்களுக்கு கருணை வழங்கப்பட்டுள்ளது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இந்தியச் சூழலில் உள்ளதா? நிச்சயம் கிடையாது. பதிலாக, நீதித் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அளவு மேலும் குறையும்.

  அதேவேளை, குற்றமிழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்காததாலேயே நீதித் துறை மீதான நம்பிக்கை குறைந்துவிடும் என்ற காரணத்தை முன்வைத்து, இவர்களைத் தூக்கிலிட்டுவிட முடியுமா என்கிற கோணத்திலும் இதை அணுக வேண்டியுள்ளது.

  மரண தண்டனைகள் குற்றங்களைத் தடுக்குமா?

  குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான குற்றங்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனைகள் குற்றங்களைத் தடுப்பதாக இதுவரை போதிய ஆதாரங்கள் எங்கும் திரட்டப்படவில்லை என மனித உரிமை ஆணையங்கள் நிகழ்த்திய பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத மற்றும் போர்க் குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என இந்திய சட்ட ஆணையமே கடந்த 2015 இல் பரிந்துரைத்தது.

  இப்படிப்பட்ட நிலையில், குறிப்பாக பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து விவாதிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இது.

  பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா?

  ஒரு பெண் வல்லுறவுக்கு உள்ளானால், அந்தக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும் நீதி என்று அர்த்தம் புகட்டப்படுவதை ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது. இங்கு நடைபெறும் ஒவ்வொரு பாலியல் குற்றத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்ட நீதி என்று குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிவிட முடியாது.

  தெலங்கானாவில் அண்மையில் பெண் கால்நடை மருத்துவரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகக்  குற்றம்சாட்டப்பட்ட நால்வர் காவல் துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டபோது,  மக்களிடையே பெருமளவில் ஆதரவு எழுந்தது. அந்தப் பெண்ணுக்கு நீதி வழங்கப்பட்டதாகக் கொண்டாடப்பட்டது. அதை அத்துடன் கடந்து அடுத்த வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது சரியா, தவறா நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கிறார்களா என்பதைத் தவிர வேறு என்ன ஆக்கப்பூர்வமான விவாதங்களும் கேள்விகளும் எழுந்துவிட்டன?

  தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரத்தின்படி, 2017 வரை 3.59 லட்சம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட பாலியல் குற்றங்கள் இந்தக் கணக்கில் வராது. திருமணத்துக்குப் பிறகு நடைபெறும் பாலியல் அத்துமீறல்களும், பெண் குழந்தைகள் மீது சொந்த குடும்பத்தினரே பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத குற்றங்கள். என்கவுன்ட்டரும், மரண தண்டனையும்தான் குற்றத்துக்கான தீர்வும், நீதியும் என்றால், எத்தனை தோட்டாக்கள் மற்றும் தூக்குக் கயிறுகள் தேவைப்படும் என்பதை மேலே குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி கணக்கிட்டுக் கொள்வோம்.

  பாலியல் குற்றங்கள் இங்கு வெறும் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மட்டுமல்ல. பாலியல் குற்றங்களுக்குப் பின்னும், சில அதிகாரம் மற்றும் ஆதிக்க மனநிலையும் உள்ளன.

  இந்தியக் கலாசாரத்தில் பாலியல் சமத்துவமின்றிப் பெண்களைப் புனிதமாகப் பார்க்கப்படும் மனநிலை இதற்கு அடித்தளமாக உள்ளது. கதுவா சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோது, அந்தச் சிறுமிக்கான நீதி வழங்கப்பட்டதாகப் பேசப்பட்டது. ஆனால், இது பகர்வால் சமூகத்தினர் மீது நடத்தப்பட்டு வந்த பல்வேறு வன்முறைகளின் நீட்சியே.

  ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அச்சுறுத்துவதற்காகப் பெண் சிறுமியைக் கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தின் மூலம் பாலியல் குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பதற்கான நோக்கத்தை நாம் உணரலாம்.

  நிர்பயா பாலியல் வழக்கிலும், அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே குற்றவாளிகள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அரங்கேறிய பிறகு வெளியான ஓர் ஆவணப் படத்தில் ஒரு குற்றவாளி, "நற்பண்புகளையுடைய ஒரு பெண் இரவு 9 மணியளவில் வெளியே ஊர்சுற்ற மாட்டார்; பாலியல் வன்புணர்வுக்கு ஒரு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிகப் பொறுப்பு உள்ளது; இரவு 9 மணிக்கு மேல் ஒரு ஆணுடன் பெண் வெளியே வருவதெல்லாம் தவறான செயல்" என்றெல்லாம் பேசுகிறார். மேலும், இதைத் தவறு என்று அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

  9 மணிக்கு மேல் ஒரு ஆணுடன் ஒரு பெண் தனியே வெளியே சென்றால் தவறு என்பதைத் தீர்மானித்து அதற்கான தண்டனையை வழங்கும் அதிகாரத்தை அவர் கையில் ஒப்படைத்தது யார் என்றால் இந்தச் சமூகத்துக்கும் அதில் நிச்சயம் மிக முக்கிய பங்கு உள்ளது. அவர் ஓர் ஆண் என்பதாலேயே இந்தச் சமூகத்திடமிருந்து  அவராகவே அந்த அதிகாரத்தை எடுத்துக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டும்.

  பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு பாலியல் குற்றங்கள் நிகழும் போதும் இந்தச் சமூகத்தில் நிலவி வரும் மனநிலையும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து, இதற்கான நிரந்தரத் தீர்வைக் கண்டறிந்து, அதை நோக்கி நகர்வது குறித்து விவாதங்களும் ஆலோசனைகளும் மேற்கொள்ள வேண்டும். ஆனால், ஒவ்வொரு பாலியல் குற்றச் சம்பவங்கள் நிகழும்போதும், அதற்கு அதன் குற்றவாளிகள் மட்டுமே காரணம் என்று கூறுவது இந்தக் குற்றச் சம்பவத்தின் பின்புலத்திலுள்ள காரணங்களை உணரவில்லையோ என்கிற கேள்வியையே எழுப்புகிறது.

  பாலியல் குற்றம் நடக்கிறது என்றால் அதைப் பாலியல் குற்றமாக மட்டும் பார்க்காமல் அந்தக் குற்றத்துக்கான காரணத்தைத் தேட வேண்டும். அந்தக் காரணத்தைத் தேடத் தொடங்கினாலே, இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு மரண தண்டனைதானா என்ற கேள்விக்கான பதிலும் கிடைக்கும்.

  TAGS
  nirbhaya
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai