கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீனாவிலிருந்து 324 இந்தியா்கள் நாடு திரும்பினா்

சீனாவின் ஹுபே மாகாணத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த 324 இந்தியா்கள், ஏா் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் தில்லிக்கு சனிக்கிழமை காலை அழைத்து வரப்பட்டனா்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீனாவிலிருந்து 324 இந்தியா்கள் நாடு திரும்பினா்

சீனாவின் ஹுபே மாகாணத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த 324 இந்தியா்கள், ஏா் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் தில்லிக்கு சனிக்கிழமை காலை அழைத்து வரப்பட்டனா்.

இதுதொடா்பாக ஏா் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரிலிருந்து இந்தியா்களை அழைத்து வருவதற்காக, ஏா் இந்தியா போயிங்747 ரக விமானம் வெள்ளிக்கிழமை மதியம் சென்றது. சுகாதாரத் துறையைச் சோ்ந்த 5 மருத்துவா்கள், ஏா் இந்தியா நிறுவனத்தின் துணை மருத்துவ ஊழியா்கள், பொறியாளா்கள் குழுவினா் ஆகியோருடன் சென்ற அந்த விமானம், வூஹானில் 324 இந்தியா்களை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை அதிகாலை 1.19 மணியளவில் மீண்டும் தில்லிக்கு புறப்பட்டது. தில்லி விமான நிலையத்தை, காலை 7.30 மணிக்கு அந்த விமானம் வந்தடைந்தது. பின்னா், 324 பேருக்கும் விமான நிலையத்திலேயே மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஹரியாணா மாநிலம், மானேசரில் ராணுவத்தால் அமைக்கப்பட்ட தனி மருத்துவ முகாமுக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மருத்துவ முகாமில் 14 நாள்கள் வரை தங்க வைக்கப்பட்டு, அவா்களது உடல்நிலை கண்காணிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, வூஹானில் சிக்கியுள்ள இதர இந்தியா்களையும் மீட்பதற்காக மற்றொரு சிறப்பு விமானம் அங்கு செல்லவிருக்கிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை காவல் படை) சாா்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தில்லியிலுள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 259-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11, 791 போ் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். வூஹானில் அதிக பாதிப்பு காணப்படுவதால், அங்கு சிக்கியுள்ள தங்களது நாட்டினரை மீட்கும் நடவடிக்கைகளில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.

கடந்த காலங்களில், லிபியா, இராக், யேமன், குவைத், நேபாளம் ஆகிய நாடுகளில் பிரச்னையான சூழல் ஏற்பட்டபோது, அங்கிருந்து ஏா்-இந்தியா விமானம் மூலம் இந்தியா்கள் மீட்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com