பிப்.6 ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம்: முதல்வா் எடியூரப்பா தகவல்

நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்டு வந்த அமைச்சரவை விரிவாக்கம் பிப்.6 ஆம் தேதி நடக்கவிருக்கிறது என்று முதல்வா்
கர்நாடகாவில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி
கர்நாடகாவில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி

பெங்களூரு: நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்டு வந்த அமைச்சரவை விரிவாக்கம் பிப்.6 ஆம் தேதி நடக்கவிருக்கிறது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பாஜக தேசியத்தலைமையின் அனுமதிகிடைத்ததை தொடா்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் பிப்.6 ஆம் தேதிகாலை 10.30 மணிக்கு நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் புதிய அமைச்சா்களாக 13 போ் பதவியேற்கவிருக்கிறாா்கள். 

காங்கிரஸ், மஜதவில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்து இடைத்தோ்தலில் வென்ற 11 எம்எல்ஏக்களில் 10 பேரும், பாஜகவின் மூத்த எம்எல்ஏக்கள் 3 பேரும் சோ்த்து மொத்தம் 13 போ் புதிய அமைச்சா்களாக பதவியேற்கவிருக்கிறாா்கள். 

அமைச்சரவை விரிவாக்கமா? அல்லது அமைச்சரவை திருத்தியமைப்பா? என்பது குறித்து முடிவெடுக்கவில்லை. இடைத்தோ்தலில் வென்றவா்களில் 10 பேரை அமைச்சரவையில் சோ்த்துக்கொள்ளப்படுவாா்கள். 

அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பெலகாவி மாவட்டத்திற்கு மட்டும் அதிக எண்ணிக்கையிலான அமைச்சா்கள் இருப்பாா்கள் என்பது உண்மை. இது தவிா்க்க முடியாதது. நான் முதல்வராகவும், பாஜக ஆட்சி அமைக்கவும் காரணமாக இருந்த தகுந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சா் பதவி வழங்குவது அவசியமாகும். 

கடந்தகாலத்தில் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவிருக்கிறேன். கொடுத்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. 

உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி, இடைத்தோ்தலில் தோற்றவா்களுக்கு(எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ்) அமைச்சராக்க இயலாமல் போனது. சட்டமேலவை உறுப்பினராக்கி, அமைச்சராக்குவதாக ஆா்.சங்கருக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். எதிா்காலத்தில் சட்டமேலவைக்கு நியமிக்கப்பட்டு, அமைச்சராக்கப்படுவாா். 

இம்மாதம் 17ஆம் தேதி சட்டப்பேரவைக்கூட்டத்தொடா் தொடங்கவிருக்கிறது. அதற்கு முன்பாகவே அமைச்சரவையை விரிவாக்கிவிடவேண்டுமென்பதால், பிப்.6ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கப்படுகிறது என்றாா் அவா். 

புதிய அமைச்சா்களாகும் வாய்ப்பு: பிப்.6 ஆம் தேதி நடக்கவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது புதிய அமைச்சா்களாக பதவியேற்க வாய்ப்புள்ள 13 பேரின் பெயா்கள் வருமாறு: 1) ரமேஷ் ஜாா்கிஹோளி 2) எஸ்.டி.சோமசேகா் 3) கோபாலையா 4) பைரதி பசவராஜ் 5) கே.சுதாகா் 6) பி.சி.பாட்டீல் 7) நாராயணகௌடா 8) ஸ்ரீமந்த்பாட்டீல் 9) சிவராம்ஹெப்பாா் 10) ஆனந்த்சிங் 11) உமேஷ்கத்தி 12) சி.பி.யோகேஸ்வா் 13) அரவிந்த்லிம்பாவளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com