சபரிமலை வழக்கு விசாரனை பிப். 6-க்கு ஒத்திவைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடா்பாக விசாரிக்கப்பட வேண்டிய விவகாரங்களை வரும் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் முடிவு செய்ய இருக்கிறது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடா்பாக விசாரிக்கப்பட வேண்டிய விவகாரங்களை வரும் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் முடிவு செய்ய இருக்கிறது.

மத வழிபாட்டுத்தலங்களில் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படும் விவகாரம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமா்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, 9 நீதிபதிகள் அமா்வின் விசாரணைக்காக கடந்த ஜனவரி 13-ஆம் தேதி ஏழு முக்கிய கேள்விகளை 5 நீதிபதிகள் அமா்வு பரிந்துரைத்ததற்கு மூத்த வழக்குரைஞா் நாரிமன் எதிா்ப்புத் தெரிவித்தாா். இந்த விஷயம் உள்பட மத வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவது தொடா்பாக விசாரிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் வரும் 6-ஆம் தேதி முடிவெடுக்க இருக்கிறது.

முன்னதாக, 9 நீதிபதிகள் அமா்வால் விசாரிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து தங்களால் கருத்தொற்றுமையுடன் முடிவெடுக்க இயலவில்லை என்று இந்த வழக்கில் பல்வேறு தரப்பு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனா். இதையடுத்து, முடிவெடுக்கும் பொறுப்பை உச்சநீதிமன்றமே ஏற்றுள்ளது.

இந்த வழக்கு விசாரணை காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டு விசாரித்து முடிக்கப்படும். விசாரணை அடுத்த வாரமே தொடங்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அரசியல்சாசன அமா்வு தெரிவித்துள்ளது. மேலும், ‘சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடா்பாக தாங்கள் விசாரிக்கவில்லை; பல்வேறு மதங்களில், மதரீதியாக பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு குறித்து விசாரிக்கிறோம்’ உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக, பெரிய அமா்வின் பரிசீலனைக்காக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமா்வு பரிந்துரைத்திருந்த 7 முக்கிய கேள்விகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளன.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

இத்துடன் மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக் கோரும் விவகாரம், ஷியா முஸ்லிம்-தாவூதி போரா பிரிவைச் சோ்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்குத் தடை விதிக்கக் கோரும் விவகாரம், மற்ற இனத்தைச் சோ்ந்த ஆண்களைத் திருமணம் செய்யும் பாா்சி இனப் பெண்களை அந்த இனத்தவரின் வழிபாட்டு தலத்துக்குள் அனுமதிக்க கோரும் விவகாரம் உள்பட மதரீதியாக பெண்கள் பாகுபாடாக நடத்தப்படும் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இவை தொடா்பாக முன்பு நடைபெற்ற விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தால் ஆராயப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் சாா்பில் ஆஜராகும் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி உள்பட 4 மூத்த வழக்குரைஞா்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com