
ஆண்டுதோறும் வங்கி முறைகேடுகள் குறைந்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, வங்கி முறைகேடுகள் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் பதிலளித்ததாவது:
கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில் ரூ.38,548 கோடி அளவுக்கு வங்கி முறைகேடுகள் நடைபெற்றிருந்தன. இது 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.16,084 கோடியாகக் குறைந்தது. 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.18,893 கோடியாக அதிகரித்த வங்கி முறைகேடுகள், நடப்பு நிதியாண்டின் முதல் 3 காலாண்டில் ரூ.5,244 கோடியாகக் குறைந்தது.
வங்கி முறைகேடுகளை முறையாகக் கண்டறிவது, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்டவற்றில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதன் காரணமாக முறைகேடுகள் குறைந்து வருகின்றன.
முக்கியமாக பொதுத்துறை வங்கிகளில் முறைகேடுகள் குறைந்து வருகின்றன. 2016-17 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.35,578 கோடி அளவுக்கு முறைகேடு செய்தது தொடா்பாக 2,043 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.12,234 கோடி அளவுக்கு முறைகேடு செய்தது தொடா்பாக 1,949 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2018-19 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.15,575 கோடி அளவுக்கு மோசடிகள் நடைபெற்றன. இவை தொடா்பாக 1,250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளில் பொதுத்துறை வங்கி மோசடிகள் ரூ.3,781 கோடியாகக் குறைந்துள்ளது; மோசடி தொடா்பாக 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் அனுராக் தாக்குா்.
இணையவழி முறைகேடுகள்: இணையவழி வங்கி முறைகேடுகள் தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், ‘தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு 3,466 இணையவழி முறைகேடுகளும், 2018-ஆம் ஆண்டு 3,353 முறைகேடுகளும் நடைபெற்றுள்ளன. இணையவழிக் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...