உங்கள் ஆசி இருக்கையில் எந்தத் தடியும் என்னை ஒன்றும் செய்யாது: மேடையில் நெகிழ்ந்த மோடி

பொதுமக்களாகிய உங்களின் ஆசி இருக்கையில் எந்தத் தடியும் என்னை ஒன்றும் செய்யாது என்று அசாமில் பொதுக்கூட்ட மேடையில்  பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசினார்
அசாம் பேரணியில் மோடி
அசாம் பேரணியில் மோடி

கோக்ரஜார்: பொதுமக்களாகிய உங்களின் ஆசி இருக்கையில் எந்தத் தடியும் என்னை ஒன்றும் செய்யாது என்று அசாமில் பொதுக்கூட்ட மேடையில்  பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசினார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசார பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பங்கேற்றுப் பேசினார்.  அவர் தனது பேச்சில், 'பொறுத்திருந்து கவனியுங்கள். தற்போது நிறைய உரைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி, இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. இந்திய இளைஞர்கள் அவரைத் தடியால் அடிப்பார்கள். இளைஞர்களுக்கு சரியான  வேலை அளிக்கா விட்டால், இந்தியா முன்னேற முடியாது என்பதை மோடிக்கு அவர்கள் புரிய வைப்பார்கள்' என்று பேசினார்.

இதற்கு பதிலடியாக புதனன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசும் போது பிரதமர் மோடி கூறியதாவது:

இந்த 70 வருடங்களில், தன்னிறைவான எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் இல்லை. நான் ஒரு தலைவரின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அதில் அவர் இன்னும் ஆறு மாதங்களில் மோடியை தடியைக் கொண்டு தாக்குவேன் என்று பேசுகிறார். அது ரொம்பக் கடினமான காரியமாக இருப்பதால்தான் ஆறு மாதங்கள் ஆகிறது என்று நினைக்கிறன். இருந்தாலும் இந்த ஆறு மாதங்களில் அதிகமான சூரிய நமஸகாரங்கள் செய்து நான் என்னை அதற்காகத் தயார் படுத்திக் கொள்வேன். கடந்த இருபது வருடங்களாக என் மீது தொடர்ந்து  செய்யப்பட்டு வரும் அவதூறுகளின் காரணமாக, நான் அவதூறு மற்றும் தடியால் தாக்குதல் ஆகியவற்றால் பாதிக்கப்படாத நிலைக்குச் சென்று விட்டேன். இருந்தாலும் முன்கூட்டியே தகவல் கூறியதற்கு நன்றி!

இவ்வாறு அவர் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்த மோடியின் பேச்சிற்கு ராகுல் காந்தி எழுந்து எதிர்ப்புத் தெரிவிக்க எத்தனித்த சமயம் மோடி, 'நான் 30 முதல் 40 நிமிடங்களாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால இப்போதுதான் மின்சாரம் பாய்ந்துள்ளது; நிறைய ட்யூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கிறது' என்று மறைமுகமாக ராகுலை ஏளனம் செய்து பேசினார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததால் சபையில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களாகிய உங்களின் ஆசி இருக்கையில் எந்தத் தடியும் என்னை ஒன்றும் செய்யாது என்று அசாமில் பொதுக்கூட்ட மேடையில்  பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசினார்.

அசாமில் போடோ பிரிவினைவாத இயக்கங்களுடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்ததம் குறித்த வெற்றிப் பேரணி  கோக்ரஜார் நகரில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில்  அதிகமான அளவில் பெண்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு மோடி பேசியாதாவது:

மோடியை தடியால் தாக்குவது குறித்து சிலர் பேசி வருகிறாரகள். ஆனால் இத்தனை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசி என்னைக் கவசமாக இருந்து பாதுகாக்கும் போது, எந்தத் தடியும் என்னை ஒன்றும் செய்யாது. எனக்கு ஆதரவாக இத்தனை பேர் திரண்டு வந்திருப்பது எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

கண்டிப்பாக சிறிது காலத்தில் இந்தப் பேரணிதான் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தப் பகுதியில் நடந்த மிகப் பெரிய பேரணி என்று அரசியல் நோக்கர்கள் கூறுவார்கள். பிரதமரான பிறகு கூட நான் இந்தப் பகுதிக்கு தொடர்ந்து வந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை இங்கு நிலவும் சூழல் எனக்கு முழுமையான நிம்மதியைத் தருகிறது. நான் எத்தனையோ பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியிருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு மக்கள் திரளைக் கண்டதில்லை.

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com