தில்லி பேரவைத் தேர்தல்: 62% வாக்குப்பதிவு!

தில்லி சட்டப் பேரவைக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 61.67 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தில்லி பேரவைத் தேர்தல்: 62% வாக்குப்பதிவு!

தில்லி சட்டப் பேரவைக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 61.67 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் ஞாயிற்றுக்கிழமைதான் தெரிய வரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2015-இல் நடைபெற்ற தேர்தலில் 67. 8% வாக்குகள் பதிவாகியிருந்தன.
 தில்லியில் சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் அமைதியாக முடிவடைந்தது. 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
 பல வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதனிடையே, இரவு 8.25 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் 58.49 ஆகவும், இரவு 8.55 மணி நிலவரப்படி 59.91 சதவீதமாகவும், 9.30 மணிக்கு 60 சதவீதமாகவும் இருந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள் எஸ்.ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் புரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பர்வேஷ் வர்மா எம்.பி., தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி மற்றும் ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி ராம் லால் ஆகியோர் வாக்களித்த முக்கியப் பிரமுகர்களில் அடங்குவர்.
 கூடுதல் பாதுகாப்பு: தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைகளுக்கும் சனிக்கிழமை ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 79 பேர் பெண்கள். இந்தத் தேர்தலில் 1.47 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 13,750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
 காலையில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாக்குப்பதிவு மந்தமாக தொடங்கியது. பெரும்பாலான வாக்குப் பதிவு மையங்களில் கூட்டமின்றி காணப்பட்டது. அதன் பின்னர் விறுவிறுப்பு காணப்பட்டது.
 கேஜரிவால் நம்பிக்கை: பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைப்போம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.
 தில்லியில் மீண்டும் ஆம் ஆத்மியே ஆட்சியை கைப்பற்றும் என்று வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com