1993 முதல் தில்லி பேரவைக்குத் தேர்வான 31 பெண்கள்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்று முடிந்து, நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
1993 முதல் தில்லி பேரவைக்குத் தேர்வான 31 பெண்கள்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்று முடிந்து, நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

1993ம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற 6 தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதாவது 22 ஆண்டுகளில் வெறும் 31 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

1993 மற்றும் 1998ம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த தலா 1 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அதன் பிறகு பாஜக சார்பில் வேறு எந்த பெண் வேட்பாளரும் வெற்றி பெற்று பேரவைக்குச் செல்லவில்லை.

அதே சமயம், 1993ம் ஆண்டு மூன்று பெண்கள் எம்எல்ஏவாகினர். இவர்களில் இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பாஜகவை சேர்ந்தவர். 

1998ம் ஆண்டுதான் தில்லி சட்டப்பேரவைக்கு அதிகமான பெண்கள் தேர்வானர்கள், அப்போது ஷீலா தீட்சித் முதல்வரானார். அந்த பேரவைத் தேர்தலில் 9 பெண்கள் எம்எல்ஏக்களாகி சட்டப்பேரவைக்குச் சென்றனர். அவர்களில் 8 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் பாஜகவைச் சேர்ந்தவர். அவர் யாரென்றால் சுஷ்மா சுவராஜ்தான். அப்போது மிகக் குறுகிய காலம் பேரவைத் தேர்தலுக்கு முன்பு இவர் தில்லியின் முதல்வராகவும் பதவி வகித்தார்.

1998 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஷீலா தீட்சித் பதவியேற்றார். தில்லியின் இரண்டாவது பெண் முதல்வர் ஷீலா தீட்சித் என்ற பெருமையைப் பெற்றார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2019ம் ஆண்டு இருவருமே ஒரு மாத இடைவெளியில் மரணம் அடைந்தனர்.

2003ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பெண்களும், 2008ம் ஆண்டு தேர்தலில் 3 பெண் எம்எல்ஏக்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

2012ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட பிறகு தில்லியில் அரசியல் வடிவம் மாறியது.  2013ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 3 பெண்கள் எம்எல்ஏக்களாகினர்.  அப்போது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆம் ஆத்மி அரசமைத்து 49 நாட்களிலேயே ராஜினாமா செய்தது.

2015ல் மீண்டும் தேர்தல் நடைபெற்று, 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 67 இடங்களைப் பிடித்தது. அப்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 6 பெண்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

எனவே, இதுவரை நடைபெற்ற 6 தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒட்டுமொத்தமாக 31 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்வாகி பேரவைக்குச் சென்றுள்ளனர். இவர்களில் 20 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், 9 பேர் ஆம் ஆத்மியையும், பாஜகவைச் சேர்ந்த இருவரும் அடங்குவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com