புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கூடாது: மத்திய அமைச்சரிடம் ஜெயக்குமார் வலியுறுத்தல்

ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற புதிய விதியை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை மனுவை மத்திய அமைச்சரிடம் ஜெயக்குமார் இன்று நேரில் அளித்தார்.
புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கூடாது: மத்திய அமைச்சரிடம் ஜெயக்குமார் வலியுறுத்தல்

புது தில்லி: ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற புதிய விதியை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை மனுவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் அதிமுக எம்.பி.க்களும் இன்று நேரில் அளித்தனர்.

மேலும், தமிழகத்தில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி எழுதிய கடிதத்தையும், ஜெயக்குமார் அளித்தார்.

ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற புதிய விதியை ரத்துச் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரும் 10-ஆம் தேதி தமிழகத்துடன் பேச்சு நடத்த மத்திய அரசு சம்மதித்துள்ளதாக அதிமுக மாநிலங்களவைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

அதன்படி, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்,  மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, உள்ளிட்டோருடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு தில்லியில் இன்று  நடைபெற்றது.

புது தில்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குத் தடையில்லை என்றும் புதிதாக எந்தத் திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் முடிவு எட்டப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்புக்குப் பிறகு தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை முதல்வர் நிறைவேற்றி அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பாகும்.

இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கைகள் மத்திய அமைச்சர்களிடம் விளக்கமாக அளிக்கப்பட்டது. அது குறித்து முதல்வர் எழுதிய விரிவான கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் மண்டலம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி வைத்தக் கோரிக்கையை பரிசீலித்து இன்னும் 4 நாட்களில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்கிறோம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து கடந்த வாரம் மக்களவை, மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. மாநிலங்களவையில் இது குறித்து அதிமுக உறுப்பினா் நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ‘கடந்த ஜனவரி 16-ஆம் தேதி ஹைட்ரோ காா்பன் மற்றும் எரிவாயு எண்ணெய் கண்டறியும் ஆய்வுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதிக்கும் முன்பு பொது மக்களிடமும் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்கிற திருத்தப்பட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் பொதுமக்களுடைய கருத்து அறிந்த பின்னரே ஹைட்ரோ காா்பன் திட்டங்களுக்கு மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தாா். நான் இந்த விவகாரத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் எழுப்பினேன். அப்போது மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி என்னை அழைத்துப் பேசினாா். இது தொடா்பாக தமிழக அரசுடன் வருகிற 10-ஆம் தேதி பேச்சு நடத்துவதாக அவா் உறுதியளித்துள்ளாா். இது குறித்து மத்திய அரசு, தமிழகத்துக்கு சாதகமான ஒரு முடிவை எடுக்க வேண்டும்’ என்றாா்.

இதே விவகாரத்தை மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் திருச்சி சிவாவும், மக்களவையில் நாகைத் தொகுதி உறுப்பினா் செல்வராஜும் எழுப்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com