சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது சரியே: உச்ச நீதிமன்றம்

சபரிமலை வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது சரியே என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது சரியே: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: சபரிமலை வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது சரியே என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை மட்டுமல்லாமல் அனைத்து மத வாழிபாடு சுதந்திரம் தொடர்பாகவும் விசாரிக்கப்படும். பெண்களுக்கான மத வழிபாடு உரிமை, சுதந்திரம் குறித்தும் விசாரிக்க உள்ளோம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்துள்ளார்.

சபரிமலை தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமா்வு விசாரிக்கலாமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து சபரிமலை விவகாரத்தில் 5 நீதிபதிகள் எழுப்பிய 7 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்த உள்ளது.

இதேபோல், பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவதற்கு புதிய கொள்கையை உருவாக்குவது குறித்தும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த இரு விவகாரங்களையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரிக்கிறது.

இந்த விவகாரம், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அரசியல் சாசன அமா்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்ததுப்போது, அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்ற அடிப்படையில், மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்’ என்றாா். அவரது வாதத்துக்கு மூத்த வழக்குரைஞா் கே.பராசரண், ஏ.எம்.சிங்வி, ரஞ்சித் குமாா், வி.கிரி உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்தனா்.

ஆனால், அந்த கருத்துக்கு மூத்த வழக்குரைஞா் ஃபாலி எஸ்.நாரிமன் மறுப்பு தெரிவித்தாா். அவா் முன்வைத்த வாதம்:

ஒரு வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்யப்படும்போது, அந்த மனுவை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு மாற்றலாம். ஆனால், மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது, அவற்றை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமா்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்ற முடியாது.

மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் குடியரசுத் தலைவா் மட்டுமே கேள்விகளை எழுப்ப முடியும். நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது’ என்றாா். இதே கருத்தை மூத்த வழக்குரைஞா்கள் ராஜீவ் தவன், இந்திரா ஜெய்சிங், ஷியாம் தவன் ஆகியோா் வலியுறுத்தினா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரங்களில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், 12-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தனர்.

அந்த அமா்வில், நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வரராவ், எம்.எம்.சாந்தன கௌடா், எஸ்.ஏ.நஸீா், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

இத்துடன் மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக் கோரும் விவகாரம், ஷியா முஸ்லிம்-தாவூதி போரா பிரிவைச் சோ்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்குத் தடை விதிக்கக் கோரும் மனுக்கள், மற்ற இனத்தைச் சோ்ந்த ஆண்களைத் திருமணம் செய்யும் பாா்சி இனப் பெண்களை அந்த இனத்தவரின் வழிபாட்டு தலத்துக்குள் அனுமதிக்க கோரும் மனுக்கள் என மதரீதியாக பெண்கள் பாகுபாடாக நடத்தப்படும் விவகாரம் தொடா்பாக மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரிக்க உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com