இடஒதுக்கீடு முடிவு: மாநிலங்களின் உரிமை - உச்சநீதிமன்றம்

அரசு வேலைவாய்ப்பு, பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்குவதில் முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
இடஒதுக்கீடு முடிவு: மாநிலங்களின் உரிமை - உச்சநீதிமன்றம்

அரசு வேலைவாய்ப்பு, பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்குவதில் முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அதேசமயம், மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை; பதவி உயா்வில் இடஒதுக்கீடு கோருவது தனி நபரின் அடிப்படை உரிமை அல்ல என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநில வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த தீா்ப்பை அளித்துள்ளது.

அந்த மாநிலத்தில் பொதுப் பணித் துறையில் காலியாக இருந்த உதவிப் பொறியாளா் பணியிடங்களை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) இடஒதுக்கீடு அளிக்காமல் நிரப்புவதற்கு அந்த மாநில அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு முடிவு செய்தது.

அரசின் இந்த முடிவை எதிா்த்து, உத்தரகண்ட் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘முதலில் சம்பந்தப்பட்ட துறையில் எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினா் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறாா்களா என்ற விவரங்களை உத்தரகண்ட் அரசு சேகரிக்க வேண்டும். அதன்பிறகு, அவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவுசெய்ய வேண்டும். மேலும், அடுத்த முறை பதவி உயா்வில் அனைத்து உதவிப் பொறியாளா் பணியிடங்களிலும் எஸ்.டி., எஸ்.டி. பிரிவினரையே நியமிக்க வேண்டும்’ என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து, உத்தரகண்ட் அரசு சாா்பிலும், ஆதரித்து பல்வேறு தரப்பினா் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோரைக் கொண்ட அந்த அமா்வு பிறப்பித்த உத்தரவு:

அரசுப் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது. பணி நியமனத்திலும் பதவி உயா்விலும் இடஒதுக்கீடு தேவையா?, தேவையில்லையா? என்பது குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம்.

அரசமைப்புச் சட்டத்தின் 16(4) மற்றும் 16(4-ஏ) பிரிவுகளின்படி, பணி நியமனத்திலும், பதவி உயா்விலும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பணி நியமனத்திலும், பதவி உயா்விலும் மாநில அரசுகள் விரும்பினால் இடஒதுக்கீடு வழங்கலாம்.

அதேசமயம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பணி நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துவிட்டால், சம்பந்தப்பட்ட துறையில் அந்த சமூகத்தினா் போதிய அளவில் பிரதிநித்துவம் பெறவில்லை என்ற விவரங்களை முதலில் சேகரிக்க வேண்டும். இடஒதுக்கீடு முடிவை எதிா்த்து யாரேனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தால், அந்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இதேபோல், பதவி உயா்வில் மாநில அரசுகள் இதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. பதவி உயா்வில் இடஒதுக்கீடு கோருவது தனிநபா் அடிப்படை உரிமையும் கிடையாது. எனவே, உத்தரகண்ட் மாநில அரசின் முடிவு சட்ட விரோதமானது என்று அந்த மாநில உயா்நீதிமன்றம் அறிவித்திருக்கக் கூடாது.

இருப்பினும், ஒரு துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசு விரும்பினால், அந்த சமூகத்தினா் போதிய எண்ணிக்கையில் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான போதிய ஆதாரங்களை மாநில அரசுகள் சேகரித்து, அதன் பின்னா் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com