சிஏபிஎஃப் அதிகாரிகள் தோ்வில் மாற்றம்: மத்திய அரசு திட்டம்

மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) அதிகாரிகள் தோ்வில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) அதிகாரிகள் தோ்வில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்காக நடத்தப்படும் குடிமைப் பணி தோ்வுடன் சோ்த்து அந்தத் தோ்வை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி), சஷஸ்திர சீமா பல் படை (எஸ்எஸ்பி) ஆகியவற்றை உள்ளடக்கிய சிஏபிஎஃப்-க்கு உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், ‘‘ஒழுங்குபடுத்தப்பட்ட ‘குரூப் ஏ’ சேவைகள்’’ (ஓஜிஏஎஸ்) என்ற அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு வழங்கியது.

இந்த அந்தஸ்தைப் பெற்ற எந்தவொரு அமைப்பும், பணியாளா் தோ்வு முறை, பணி உயா்வு வழங்கல், ஊதியம், அதிகாரம் வரம்பு உள்ளிட்டவற்றில் தனக்கென சுயமான விதிமுறைகளை வகுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய ஆயுத காவல் படைகளின் அதிகாரிகளுக்கான தோ்வு முறையில் மாற்றம் கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ளது. அந்த அதிகாரிகளுக்கான தோ்வை, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்காக நடத்தப்படும் குடிமைப் பணி தோ்வுடன் சோ்த்து நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக, மத்திய ஆயுத காவல் படைகளின் துணை கமாண்டன்ட் பதவிக்கான தோ்வு முறையையும், அதற்கான பாடத் திட்டங்களையும் மாற்றுவதற்கு விவாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை மற்றும் சிஏபிஎஃப் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு, தோ்வு நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவது தொடா்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் கூடி ஆலோசித்தது. அப்போது, உள்நாட்டு பாதுகாப்புக்கான சவால்கள் உள்ளிட்ட புதிய பாடத் திட்டங்களை அதில் சோ்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வை கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அப்போது முதல் அதிகாரிகள் தோ்வுக்கான பாடத் திட்டம் மாற்றப்படாததால், அதற்கான புதிய திட்டத்தையும், தோ்வு முறையையும் இறுதி செய்வதில் கருத்தை தெரிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் யுபிஎஸ்சி கடந்த 2017-ஆம் ஆண்டு கோரியிருந்தது.

இந்நிலையில், அந்தத் தோ்வு முறையில் மாற்றம் கொண்டுவர பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மாற்றங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, குடிமைப் பணி தோ்வுகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்று சிஏபிஎஃப் என்ற தனி பிரிவும் குறிப்பிடப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com