தில்லி பேரவைத் தேர்தலில் 62.59% வாக்குப்பதிவு: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் மொத்தம் 62.59 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரண்வீர் சிங் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தில்லி பேரவைத் தேர்தலில் 62.59% வாக்குப்பதிவு: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் மொத்தம் 62.59 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரண்வீர் சிங் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், வாக்குப்பதிவு தொடர்பாக துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்பதால்தான், மொத்த வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது என்றும் அவர் விளக்கமளித்தார்.
 இது தொடர்பாக தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ரண்வீர் சிங் ஞாயிற்றுக்கிழமை இரவு அளித்த பேட்டி:
 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 62.59% வாக்குகள் பதிவாகியுள்ளன. பள்ளிமாரன் தொகுதியில் அதிகபட்சமாக 71.6 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக தில்லி கன்டோன்மென்டில் 45.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சீலம்பூர் தொகுதியில் 71.22 சதவீதமும், ஓக்லா தொகுதியில் 58.84 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலை விட 2 சதவீதம் கூடுதலாக இத்தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இத்தேர்தலில் 62.55 சதவீதம் பெண்கள் வாக்களித்துள்ளனர்.
 காலதாமதம் ஏன்?: மொத்த வாக்குப்பதிவு தொடர்பாக அறிவிக்க தாமதம் ஏற்பட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமில்லாதவை. வாக்குப் பதிவு தொடர்பாக துல்லியமான தகவல்களைத் தகவல்களை வழங்க வேண்டும் என்பதால்தான் காலதாமதம் ஏற்பட்டது.
 வாக்குப்பதிவு உள்ளிட்ட தேர்தல் பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சனிக்கிழமை இரவு முழுவதும் பரிசீலனை செய்தனர். அதனால் காலதாமதம் ஏற்பட்டது. இது வழக்கமான ஒன்றுதான். தரவுகளை துல்லியமாக வழங்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். துல்லியம் இல்லாத தரவுகளை தேர்தல் ஆணையம் வழங்கக் கூடாது.
 மேலும், தேர்தல் அதிகாரியொருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் செல்லும் ஒரு விடியோவை வெளியிட்டு, தேர்தலை ஆணையம் மீது ஆம் ஆத்மி கட்சியினர் முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அந்த தேர்தல் அதிகாரி, தேர்தலில் பயன்படுத்தப்படாத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையே எடுத்துச் சென்றார். தேர்தலில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் செல்லவில்லை என்றார் ரண்வீர் சிங்.
 தில்லியில் சனிக்கிழமை சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான மொத்த வாக்குகளின் சதவீதத்தை அறிவிக்க காலதாமதம் ஏற்பட்டதை, ஆம் ஆத்மி கட்சி கடுமையான விமர்சித்தது.
 இதுதொடர்பாக, அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "தேர்தல் நடந்து முடிந்து பல மணி நேரம் ஆகிவிட்ட பிறகும், இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது. பாஜகவின் அனுமதிக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா?' என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com