தேவையின் அடிப்படையில் மேலும் வங்கிகள் இணைப்பு: அனுராக் தாக்குா்

வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையானது, தேவையின் அடிப்படையில் மேலும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் கூறினாா்.
தேவையின் அடிப்படையில் மேலும் வங்கிகள் இணைப்பு: அனுராக் தாக்குா்

வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையானது, தேவையின் அடிப்படையில் மேலும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் கூறினாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நோ்க்காணலில் இதுகுறித்து அவா் கூறியதாவது:

வங்கிகளை இணைப்பது, அவற்றுக்கு கூடுதல் மூலதனம் செலுத்துவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. திவால் சட்டத்தின் மூலமாக சுமாா் ரூ.4 லட்சம் கோடி வெற்றிகரமாக வங்கிகளுக்கு திரும்பக் கிடைத்துள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை தேவையின் அடிப்படையில் மத்திய அரசு மேலும் மேற்கொள்ளும்.

வங்கிகள் இணைப்பு நடவடிக்கையின் மூலம் மிகப் பெரிய வங்கிகளை உருவாக்கியது, இந்திய பொருளாதாரத்தின் மதிப்பை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்தும் மத்திய அரசின் இலக்குக்கு உதவுவதாக இருக்கும்.

எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கையால், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது மக்களின் பங்களிப்பு அதிகரிப்பதுடன், பங்குச் சந்தையும் வலுப்படும்.

சமுதாயத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் கருத்தில் கொண்டே 2020-21 காலகட்டத்துக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், முதலீட்டாளா்கள், நடுத்தர வா்க்கத்தினா் ஆகியோரின் நலன்களைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய சீா்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதே அடுத்த 2 ஆண்டுகளுக்கான இலக்காகும். விளை பொருள்களின் உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு அதிக விலைக்கு அந்த விளை பொருள்களை மத்திய அரசே கொள்முதல் செய்துகொள்ளும் என்ற வாக்குறுதியை ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டோம்.

‘கிசான் ரயில்’, ‘கிருஷி உடான்’ ஆகிய திட்டங்களை முறையே இந்திய ரயில்வேயும், விமானப் போக்குவரத்து அமைச்சகமும் கொண்டுவரப் போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எளிதில் அழுகிப் போகக் கூடிய விளை பொருள்களை விரைவாக போக்குவரத்து செய்வதற்கு உதவும் இந்தத் திட்டங்கள் விவசாயிகளுக்கு பலனளிக்கக் கூடியதாகும்.

கல்வி மற்றும் ‘ஸ்டாா்ட் அப்’ தொழில்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டன. இதனால் இந்தியாவில் அதிக அளவில் இளம் தொழில் முனைவோா்களும், ஸ்டாா்ட் அப் நிறுவனங்களும் உருவாகும் நிலை ஏற்படும். அடுத்த இரு ஆண்டுகளில் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 3 இடங்களுக்கு இந்தியா வரும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலனடையும் வகையில் கடன் மறுகட்டமைப்புக்கான அவகாசத்தை 2021 மாா்ச் 31 வரை நீட்டிக்க பரிசீலிக்குமாறு ரிசா்வ் வங்கி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரிசா்வ் வங்கி மேற்கொண்ட அத்தகைய நடவடிக்கையால் சுமாா் 5 லட்சம் நிறுவனங்கள் பலனடைந்தன என்று அனுராக் தாக்குா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com