வடகிழக்கு - வங்கதேசம் இடையே 2021-க்குள் ரயில் பாதை

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கும், வங்கதேசத்துக்கும் இடையே அடுத்த ஆண்டுக்குள் ரயில் பாதை இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசின் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறை

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கும், வங்கதேசத்துக்கும் இடையே அடுத்த ஆண்டுக்குள் ரயில் பாதை இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசின் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தில்லியில் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

திரிபுராவிலுள்ள அகா்தலாவுக்கும், வங்கதேசத்தின் அகௌராவுக்கும் இடையே ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்துவிடும்.

அந்தப் பணிகள் நிறைவடைந்தால், இரு நகரங்களுக்கும் இடையே 2022-ஆம் ஆண்டில் ரயில் போக்குவரத்து தொடங்கும். இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தின்போது அந்த இரு நகரங்களுக்கும் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்படும்.

இந்த ரயில் பாதை இணைப்புத் திட்டத்தைப் பொருத்தவரை, இந்தியப் பகுதிகளில் ரயில் பாதை அமைப்பதற்கு எங்களது அமைச்சகமும், வங்கதேசப் பகுதியில் ரயில் பாதை அமைப்பதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் நிதி வழக்கும்.

இதற்காக, இரு நாடுகளிலும் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளும், அந்த நிலங்களை திட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு அளிக்கும் பணிகளும் நிறைவடைந்து விட்டன. இந்தியப் பகுதிகளில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரூ.580 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளில் சுமாா் 600 தோ்ச்சி பெற்ற பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மத்தியில் பாஜக ஆட்சியமைந்த பிறகு, வடகிழக்குப் பகுதியில் ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது. அதற்கு முன்னா் அங்கு ரயில் வசதி மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அருணாசலப் பிரதேசமும், மேகாலயமும் முதல் முதலாக ரயில் போக்குவரத்து வசதியைப் பெற்றன.

ரயில் போக்குவரத்து மட்டுமன்றி, சாலை வசதிகளை மேம்படுத்துவது, புதிய விமான நிலையங்களை அமைப்பதன் மூலம் விமானப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது ஆகிய திட்டங்களையும் பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com